பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பான அதிபர், பெற்றோர், மாணவர்களுக்கான கொவிட் 19 ஆலோசனைக் கோவை..!

சுகாதார விதிமுறைகளுக்கு அமைய திட்டமிடப்பட்டவாறு பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப் பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து பகுதிகளிலும் உள்ள அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 11ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதேவேளை, மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் தரம் 11 இற்கான கற்றல் செயற்பாடுகளை எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கடந்த 4ஆம் திகதி கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்திருந்தார்.

தற்போது நிலவும் கொரோனா நிலைமை காரணமாக, சுகாதாரத்துறை அதிகாரிகளின் மேற்பார்வை மற்றும் அறிவுரைகளுக்கு அமைய அவர்களது வழிகாட்டல்களின் படி பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் சுகாதார ரீதியான பாதுகாப்பை உறுதிப்படுத்தல், ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் தொடர்ந்தும் சுகாதார ரீதியிலான பாதுகாப்பை முன்னெடுத்துச் செல்லுதல் போன்ற காரணங்களுக்காக அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் மற்றும் பாடசாலை சுகாதாரக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் பொறுப்புடன் செயற்பட வேண்டியது அவசியமாகும்.

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலின் கீழ் சுகாதார விதிமுறைகளுக்கு அமைய பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சினால் ஆலோசனைக் கோவை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

அதிபர்களுக்கான ஆலோசனைகள் :-

● 2021 ஜனவரி மாதம் 06, 07, 08, 09 மற்றும் 10 ஆம் திகதிகளில் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையில் பெற்றோர் மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்களின் பங்களிப்புடன் பாடசாலையை ஆரம்பிப்பதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தல்

● பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பில் பாடசாலை சமூகத்தினரின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை பெற்று தேவையான மாற்றங்களை செய்தல்

● COVID – 19 தொற்றுநோய் நிலைமையின் கீழ் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் நடந்துகொள்ள வேண்டிய முறை தொடர்பில் பிரதேசத்தின் சுகாதார வைத்திய அதிகாரி, பொது சுகாதார பரிசோதகர் ஆகியோருடன் இணைந்து தேவையான நடவடிக்கைகளை எடுத்தல்

● கொரோனா பரவலை தடுப்பதற்காக பாடசாலை மற்றும் கல்வி நிறுவனங்களை தயார்ப்படுத்தல் தொடர்பான 15/2020 இலக்க சுற்றுநிரூபத்தை நடைமுறைப்படுத்தல்

● பாடசாலையை ஆரம்பித்ததன் பின்னர் தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகளை முன்னெடுத்துச் செல்லல்

● பாடசாலைக்கு வருகை தரும் மாணவர்களை இனிதாக வரவேற்பதனூடாக சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய வலிமையை ஏற்படுத்தல்

● மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தரும்போது, பாடசாலைக்குள் அல்லது பாடசாலையிலிருந்து வௌிச்செல்லும் வழியில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்குதல், ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு கடினமாக இருப்பின் சமூக இடைவௌியை பேணக்கூடிய சந்தர்ப்பங்களில் முகக்கவசத்தை அகற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்குதல்

● பாடசாலைக்குள் நுழையும் போது சகல மாணவர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்தல் மற்றும் தேவையான சந்தர்ப்பங்களில் மீண்டும் வகுப்பறைகளுக்குள் உடல் வெப்பநிலையை பரீட்சித்தல்

● மாணவர்கள் பாடசாலைக்குள் நுழையும் போது இரு கைகளையும் கழுவுவதை கட்டாயமாக்குதல் மற்றும் அது திறன்பட முன்னெடுக்கப்படுகின்றதா என்பதை தினமும் மேற்பார்வை செய்தல்

● மாணவர்கள் இடையே சமூக இடைவெளியை பேணுதல்

● மாணவர்கள் கூட்டமாக சேர்வதை தடுப்பதற்கு வகுப்பு மட்டத்தில் தேவையான நேரத்தில் இடைவேளை வழங்குதல்

● வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவு நீர் மற்றும் ஏனைய உபகரணங்களை பகிர்ந்து கொள்வதை தவிர்த்தல்

● ஒருவருக்கொருவர் தொடுகையில் ஈடுபடும் வகையிலான விளையாட்டுக்களில் ஈடுபடுவதை தவிர்த்தல் மற்றும் உடற்பயிற்சி செயற்பாடுகளை சமூக இடைவௌியுடன் நடத்துதல்

● அவசர நிலைமைகளின் போது தொடர்புகொள்வதற்கு தேலையான தொலைபேசி இலக்கம் மற்றும் தகவல்களை சேகரித்து அலுவலகத்தில் காட்சிப்படுத்தல் மற்றும் அது தொடர்பில் பணியாளர்களுக்கு அறியப்படுத்தல்

● திடீரென பாடசாலையில் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்படும் சந்தர்ப்பத்தில் அவரை நோயாளர் அறைக்கு அனுப்பி உடனடியாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி, பொது சுகாதார பரிசோதகரிடம் ஆலோசனை பெற்று அதனை செயற்படுத்தல்

● அதிபரின் தலைமையில் பாடசாலையின் சுகாதார மேம்பாட்டுக் குழுவை முனைப்புடன் பேணுவதனூடாக கொரோனா பரவலை தடுப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுக்கும் பொறுப்பை ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பகிர்ந்தளித்தல்

● பாடசாலையை சுகாதார ரீதியில் பாதுகாப்பான இடமாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் மற்றும் பெற்றோர் உள்ளிட்ட பாடசாலை சமூகத்தின் முன்னிலையில் அதற்கான நம்பிக்கையை ஏற்படுத்துவதை உறுதி செய்தல்

● பாடசாலையை ஆரம்பிப்பதற்கு முன்னரான முன்னாயத்தங்கள் மற்றும் ஆரம்பித்ததன் பின்னரான ஆரோக்கிய நிலைமையை பேணுவதற்கான மேற்பார்வை ஆவணமொன்றை பேணுதல்

● மாணவர்களின் உள நலத்தை மேம்படுத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்தல்

● காய்ச்சல், சுவாச நோய்க்கான அறிகுறிகளுடைய மாணவர்கள், தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களிலிருந்து வரும் மாணவர்கள், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட குடும்பங்களிலிருந்து வரும் மாணவர்கள், சுகாதார அறிவுறுத்தல்கள் கிடைக்கப்பெறும் வரையில் பாடசாலைக்கு சமூகமளிக்காதிருக்குமாறு குறித்த மாணவர்களின் பெற்றோருக்கு தெரியப்படுத்தல்

● கொரோனா வைரஸ் தொடர்பான ஏதேனும் ஒரு நிலைமை காரணமாக வீட்டிலிருக்க நிர்ப்பந்திக்கப்படும் மாணவர்களின் அன்றாட கல்வி நடவடிக்கைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதிருக்க உதவிகளை வழங்குதல்

பெற்றோருக்கான ஆலோசனைகள் : –

★ இருமல், சளி அல்லது காய்ச்சல் போன்ற நோய் அறிகுறிகள் இருப்பின் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாதிருத்தல்

★ வீட்டில் வேறு யாரேனும் அங்கத்தவர் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தால் தங்களது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாதிருத்தல்

★ வீட்டிலுள்ள அங்கத்தவர் ஒருவர் அல்லது பிள்கை்கு PCR பரிசோதனை, Rapid Antigen பரிசோதனை செய்யப்பட்டிருந்தால் அவ் அறிக்கையின் படி சுகாதார அறிவுறுத்தல்கள் கிடைக்கப்பெறும் வரை பிள்ளையை பாடசாலைக்கு அனுப்பாதிருத்தல்

★ தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களிலிருந்து ஏனைய பிரதேசங்களிலுள்ள பாடசாலைக்கு பிள்ளையை அனுப்பாதிருத்தல்

★ தமது பிள்ளை பயன்படுத்தும் உபகரணங்கள் (புத்தகப்பை, தண்ணீர் போத்தல், உணவுப் பெட்டி, புத்தகங்கள்) ஆகியவற்றை சுத்தப்படுத்தல் அல்லது வெயிலில் இட்டு உலர்த்துதல்

★ தினந்தோறும் பிள்ளையின் ஆடைகள் மற்றும் பாதணிகளை சுத்தப்படுத்தல்

★ பாடசாலைக்கு சென்று வீடு திரும்பியதும் பிள்ளையின் கைகளை கழுவுதல் மற்றும் பிள்ளையை நீராட்டி சுத்தப்படுத்தல்

★ பாடசாலை விட்டு வந்ததும் காலணிகளை வீட்டிற்கு வௌியில் கழற்றுதல்

★ பாவித்த முகக்கவசங்களை எரித்தல்

★ தும்மல் ஏற்படும்போது பயன்படுத்திய திசு கடதாசிகளை மூடிய பாத்திரம் ஒன்றில் சேகரித்து எரித்தல்

★ வீட்டில் சமைத்த உணவுகளை மாத்திரம் பிள்ளைக்கு கொடுப்பதோடு சகல சந்தர்ப்பங்களிலும் பிள்ளை பயன்படுத்தும் பொருட்களை தனிப்பட்ட முறையில் பயன்படுத்த அறிவுறுத்தல் வழங்குதல்

★ பாடசாலை நிறைவடைந்ததும் பிள்ளையை வீட்டிற்கு வரும்படி அறிவுறுத்தல் வழங்குதல் அல்லது வீட்டிற்கு அழைத்துச் செல்லுதல்

★ பாடசாலைக்கு வரும்போது மற்றும் வீடுகளுக்கு செல்லும்போது பயன்படுத்தும் தனிப்பட்ட அல்லது பொது போக்குவரத்து சேவைகளில் சுகாதார அறிவுறுத்தல்களை கடைப்பிடிப்பதற்கு அறிவுறுத்தல் வழங்குதல்

★ தமது பிரதேசத்தில் சுகாதாரம் தொடர்பான ஏனேும் சிக்கல் இருந்தால் அது தொடர்பாக பாடசாலை அதிபருக்கு அறிவிப்பதன் மூலம் பாடசாலைக்கு ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளை குறைக்க உதவுதல்

மாணவர்களுக்கான ஆலோசனைகள் :-

★ பாடசாலை வளாகத்திற்குள் பிரவேசிக்கும் போது சவர்க்காரம் இட்டு கைகளை கழுவுதல் மற்றும் பாதணிகளை கிருமி தொற்று நீக்கத்திற்கு உட்படுத்துதல்

★ சமூக இடைவௌியை பேணுதல்

★ புத்தகங்கள், பேனைகள் போன்றவற்றை மற்றவர்களுடன் பகிர்வதை தவிர்த்தல்

★ பாடசாலை நேரத்திற்குள் கட்டாயமாக முகக்கவசம் அணிதல் மற்றும் மேலதிக முகக்கவசம் ஒன்றை புத்தகப்பையில் வைத்திருத்தல்

★ கிருமித்தொற்று நீக்கல் திரவங்களை (Sanitizer) கொண்டுவருதல் மற்றும் தேவையானபோது அவற்றை பாவித்தல்

★ பாடசாலையில் அதிக நேரம் முகக்கவசத்தை அணிய முடியாத, சிரமம் மிக்க மாணவர்கள் முகக்கேடயம் (Face Shield) பாவித்தல்

★ உணவு அருந்தும் போது அல்லது வேறு எந்த சந்தர்ப்பங்களிலும் தற்காலிகமாக முகக்கவசத்தை அகற்றி சுத்தமான பையொன்றில் வைத்தல் அல்லது அணிந்திருக்கும் சீருடையில் வைத்திருத்தல்

★ முகக்கவசங்களை ஒருபோதும் பொது இடங்களில் வைக்காதிருத்தல்

★ இருமல் மற்றும் தும்மல் ஏற்படும் சந்தர்ப்பங்களில் முழங்கையால் வாய் மற்றும் மூக்கை மறைத்துக்கொள்ளல் அல்லது திசு கடதாசியை பயன்படுத்தல் மற்றும் அவற்றை உரிய முறையில் அகற்றுதல்

★ உணவு அருந்துவதற்காக அல்லது வேறு தேவைகளுக்காக தற்காலிகமாக முகக்கவசங்களை அகற்றி பின் மீண்டும் அவற்றை அணியும் போது, கைகளை நன்றாக கழுவியிருத்தல் வேண்டும்

★ பிற நபர்களின் முகக்கவசங்களை ஒருபோதும் பயன்படாதிருத்தல்

★ வகுப்பறையை விட்டு வௌியேறி பின் மீண்டும் வகுப்பறைக்குள் வரும்போது எந்தவொரு மேற்பரப்பையும் தொட்டதன் பின்னர் கைகளை கழுவுவதற்கு நடவடிக்கை எடுத்தல்

★ உணவு மற்றும் தண்ணீர் போத்தல்களை பரிமாறுவதை தவிர்த்தல்

★ பாடசாலைக்குள் மற்றும் வௌியில் குழுக்களாக சேர்ந்திருப்பதை தவிர்த்தல்

★ பாடசாலை நிறைவடைந்தவுடன் வீடுகளுக்கு செல்லுதல் வேண்டும்

★ பாடசாலைக்கு வரும்போமு மற்றும் வீடுகளுக்கு செல்லும் போது பயன்படுத்தும் தனிப்பட்ட அல்லது பொது போக்குவரத்து சேவைகளில் சுகாதார அறிவுறுத்தல்களை கடைப்பிடித்தல்

★ தங்களுக்கு ஏதேனும் நோய், காய்ச்சல், சளி போன்ற நிலைகள் காணப்படின் அந்நிலை குணமாகும் வரை பாடசாலைக்கு செல்வதை தவிர்த்தல்

★ தமது வீட்டில் யாரேனும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தால் அல்லது கொரோனா நோயாளியுடன் தொடர்புகளை பேணியிருந்தால் சுகாதார அறிவுறுத்தல்களின் படி மறு அறிவிப்பு வரும்வரை பாடசாலைக்கு செல்லாதிருத்தல்

★ பாடசாலையில் அல்லது அதற்கு வெளியில் தேவையற்ற விதத்தில் எப்பொருளையும் தொடுவதை தவிர்த்தல்