யாழ். பல்கலை கிளிநொச்சி வளாக மாணவர்கள் கண்டுபிடித்த அரிய படைப்பு..!

0
91

யாழ்.பல்கலை கிளிநொச்சி வளாக தொழிநுட்ப பீட மாணவர்களினால் உருவாக்கப்பட்ட சிறிய ரக கார் மற்றும் உயிர் வாயுவினால் இயக்கப்படும் மோட்டார் சைக்கிள் வண்டி என்பன இன்றைய தினம் இயக்கப்பட்டன.

இவர்களின் இந்த சாதனை தொடர்பான வெளிப்படுத்தல் நிகழ்வு கிளிநொச்சியில் அமைந்துள்ள பல்கலை வளாகத்தில் இடம் பெற்றன.

கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளருமான அங்கஜன் இராமநாதன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, பல்கலைகழக மானிய ஆணைக் குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத், யாழ் பல்கலைகழக துணைவேந்தர் பேராசிரியர் ஶ்ரீ சற்குணராஜா, யாழ் பல்கலைகழக பீடாதிபதிகள் ஆகியோர் இதனைப் பார்வையிட்டனர்.
மேலும் இவர்கள் இதனைப் பார்வையிட்டதுடன் தொழில்நுட்ப பீட மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும் கூறி மேலதிக ஒத்துழைப்புகளை நல்குவதாகவும் உறுதியளித்தனர்.

இதேவேளை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட இந்த வாகனங்களை பல்கலைக் கழக துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீ சற்குணராஜா ஓட்டிப் பார்த்தமை குறிப்பிடத்தக்கதாகும்.