ஆசிரியர்களுக்கும் கொவிட் – 19 தடுப்பூசிகள்; வெளியானது தகவல்..!

பாடசாலை ஆசிரியர்களுக்கு கொவிட் தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.

இதன்படி, இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் ஆசிரியர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிக்கின்றார்.


இந்த விடயம் தொடர்பில் சுகாதார தரப்பினருடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். அநுராதபுரம் பகுதியில் ஊடகவியலாளர்களிடம் கருத்துரைத்த போதே அவர் இதனைக் கூறினார்.

ஆசிரியர்களுக்கு கொவிட் தடுப்பூசியை வழங்க வேண்டும் என தான் யோசனையொன்றை முன்வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


ஆசிரியர்கள் நாளாந்தம் பலருடன் நெருங்கி பழகி வருகின்றமையினால், அவர்களும் பாரிய அச்சுறுத்தலான நிலைமையை எதிர்நோக்கியுள்ளதாக அவர் கூறுகின்றார்.

இவ்வாறான நிலையில், இந்த விடயம் தொடர்பில் தான் லலித் வீரதுங்கவுடன் கலந்துரையாடியதாகவும் கல்வி அமைச்சர் தெரிவிக்கின்றார்.


இதன்படி, ஆசிரியர்களுக்கு கட்டம் கட்டமாக கொவிட் தடுப்பூசிகளை வழங்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.