பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு உயர்தர பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு சந்தர்ப்பம்..!

தோட்ட பகுதிகளிலுள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளில் நிலவுகின்ற ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் வெற்றிடங்களுக்கு உயர்தர பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட கவனம் செலுத்தியுள்ளார்.

ஜனாதிபதி கடந்த 06 ஆம் திகதியன்று கேகாலை மாவட்டத்தில் உள்ள தெரணியகல பிரதேச செயலக பிரிவில் திக்கெல்லகந்த கிராம சேவகர் பிரிவில் உள்ள திக்கெல்லகந்த கனிஷ்ட வித்தியாலய வளாகத்தில் நடைபெற்ற ஒன்பதாவது ‘கிராமத்துடன் உரையாடல்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.


உரையாடலின் போது திக்கெல்லகந்த கனிஷ்ட வித்தியாலயத்திற்கு புதிய கட்டிடமொன்றை வழங்கவும், ஆய்வுகூட வசதிகள் மற்றும் விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்யவும் முடிவு செய்யப்பட்டது. ஆசிரியர்களின் போக்குவரத்துக்கு முச்சக்கர வண்டியொன்றை வழங்குவதிலும் ஜனாதிபதி செலுத்தினார்.


எஸ்.எல்.டி மொபிடல் நிறுவனம் நன்கொடையளித்த கணினிகள் மற்றும் டயலொக் நிறுவனம் நன்கொடை அளித்த தொலைக்காட்சிகள் மற்றும் இணைப்புகள் திக்கெல்லகந்த கனிஷ்ட வித்தியாலயம், மாலிபொட தமிழ் வித்தியாலயம், உடுமாலிபொட ஸ்ரீ தேவானந்த வித்தியாலயம் ஆகியவற்றின் அதிபர்களிடம் ஜனாதிபதி வழங்கினார்.


மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் உள்ள ஆசிரியர்கள் பற்றாக்குறையை நீக்குவதற்கும், ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி கூறினார்.

அனைத்து பாடசாலைகளின் கணினி தேவைகளையும் ஆராய்ந்து பூர்த்தி செய்யுமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.