யாழில் மாணவர்களின் ஆடை களைந்து சோதனை; மனித உரிமை ஆணைக்குழு விளக்கம் கோரியது..!

யாழில் உள்ள பாடசாலையொன்றில் மாணவர்கள் ஆடைகள் களையப்பட்டு சோதனையிடப்படட விடயம் தொடர்பில் மாகாண கல்வித் திணைக்களத்திடம் யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழு விளக்கம் கோரியுள்ளது.

வசாவிளானிலுள்ள பாடசாலையில், பாடசாலை நேரத்தில் ஆசிரியர்கள் சிலரால் மாணவர்களின் ஆடைகள் களையப்பட்டு சோதனையிடப்பட்டதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

தரம் 11ஐ சேர்ந்த ஆண் மாணவர்களை, அவர்களின் சம்மதமின்றி ஆடைகள் களையப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் உடலில் பச்சை குத்தியுள்ளார்களா என்பதை பரிசோதிப்பதாக கூறி, பாடசாலையின் தனியான பிரதேசத்திற்கு மாணவர்களை அழைத்து சென்று மேல், கீழ் ஆடைகள் களையப்பட்டு ஆண் ஆசிரியர்கள் சிலரால் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சுமார் 70 மாணவர்கள் இவ்வாறு பரிசோதிக்கப்பட்டனர்.


ஆடை களைந்து பரிசோதித்த போது ஆசிரியர்கள் சிலர் தம்மை கிண்டலடித்ததாகவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்

இந்த சம்பவத்தையடுத்து பல மாணவர்கள் பாடசாலை செல்வதை தவிர்த்துள்ளனர். பாடசாலையில் நடந்த பரீட்சையிலும் பல மாணவர்கள் தோற்றவில்லை. பல மாணவர்கள் வீடுகளில் மன உளைச்சலுடன் இருந்ததை அவதானித்து, பெற்றோர் நடந்ததை விசாரித்து அறிந்துள்ளனர்.

இந்த விவகாரம் சர்ச்சையாக ஆரம்பிக்க, பாடசாலை நிர்வாகம் பெண் ஆசிரியர்களை அனுப்பி மீண்டும் மாணவர்களை பாடசாலைக்கு வரவைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த சம்பவத்தினால் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக, மாணவர்கள் சார்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கும்படி மாகாண கல்வி திணைக்களத்திற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதம் அனுப்பியுள்ளது.

இதேவேளை, இந்த விவகாரம் சுமுகமாக தீர்க்கப்பட்டு விட்டதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பாடசாலைக்குள் மாணவர்கள் சிலர் பச்சை குத்தும் இயந்திரத்தை கொண்டு வந்து மாணவர்கள் சிலர் பச்சை குத்திக் கொண்டனர். உடலின் அரைப்பகுதியில் பச்சை குத்தியதை புகைப்படம் எடுத்து மாணவர்கள் பகிர்ந்து கொண்டமை தெரிய வந்ததையடுத்தே சோதனை மேற்கொள்ளப்பட்டது என்றும், தமது நடவடிக்கை தொடர்பாக பெற்றோருக்கு விளக்கமளித்துள்ளதாகவும், அவர்களும் அதை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இந்த சோதனையின் போது இரண்டு மாணவர்கள் மட்டும் பச்சை குத்தியிருந்த நிலையில் கண்டறியப்பட்டதாகவும், அவர்கள் கை, நெஞ்சில் பச்சை குத்தியிருந்ததாகவும் தெரிய வருகிறது.