பாடசாலைகளுக்கு இடையிலான “பிக் மெட்ச் ” போட்டிகளுக்கு தடையில்லை – நாமல் ராஜபக்ஷ

பாடசாலைகளுக்கிடையில் விளையாடப்படும் மாபெரும் கிரிக்கெட் போட்டிகளை (பிக் மெட்ச்) நடத்துவதில் எந்தவொரு தடையைும் இல்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

விளையாட்டுத்துறை அமைச்சில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அமைச்சர் மேலும் கூறுகையில்,


“அறிமுகப்படுத்தியுள்ள சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றியே பாடசாலைகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டிகளை நடத்த முடியும்.

கொழும்பு ரோயல் கல்லூரிக்கும், கல்கிஸ்ஸை பரி.தோமா கல்லூரிக்கும் இடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி ஹம்பாந்தோட்டை சூரியவெவ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.


கொழும்பு ஆனந்தா மற்றும் நாலாந்தா கல்லூரிகளுக்கிடையிலான மாபெரும் போட்டி, காலி றிச்மன்ட் மற்றும் மஹிந்த கல்லூரிகளுக்கிடையிலான மாபெரும் போட்டி ஆகியன இம்முறை நடத்த ஆயத்தமாகவுள்ளனர்.

கிரிக்கெட் போட்டிகள் மட்டுமல்லாது கால்பந்தாட்டம், ரக்பி, மெய்வல்லுநர் போட்டிகள் உள்ளிட்ட சகல போட்டிகளும் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக நடத்த வேண்டும்” என்றார்.