வாழக் கல்..!

Written by Akshayan

பெறுவதற்கரிய மானிடப்பேறு பெற்றுக்கொண்ட நாம் நம் வாழ்வை சிறப்பான முறையில் அமைத்துக் கொள்ளும் பொருட்டு கல்வி கற்றல் வேண்டும். வாழ்வதற்கான கல்வியை அனைவரும் முயன்று கற்க வேண்டும். கல்வி கரையில்லாதது ஆனால் மனித வாழ்வோ நீர்க்குமிழி போன்று நிலையற்றது: குறுகியது. ‘கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலக அளவு’ என்பதற்கமைய நாம் கற்கவேண்டிய விடயங்கள் அதிகமாக உள்ளன. கல்வி கற்பதற்கு இளமைக் காலமே பொருத்தமெனினும் ஒருவர் இறக்கும்வரை கற்க முடியும்.


மனிதனுள் அமைந்திருக்கும் பூரணத்துவத்தை வெளிப்படுத்துவது கல்வி. கல்விமூலம் சூழலை, அறிவை, சமுகத்தை, பண்பாட்டு மரபை ஆராய்ந்து சிறந்தமுறையில் வாழமுடியும். கல்வி ஒரு மனிதனின் நல்வாழ்வுக்குரிய நல்ல நண்பனாகும். ‘கற்க மறுப்பன் வாழமறுப்பவனாகிறான்’, ‘எல்லா அழகும் அழகல்ல கல்வி அழகே அழகு’ என்பதற்கு அமைய ஒருவருக்கு உண்மையான அழகு கல்வியே என்றால் மிகையில்லை.
”கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையவர் கல்லாதவர்”
என்னும் வள்ளுவரின் பொய்யா மொழிக்கேற்ப கற்றோரே கண்ணுடையவர் ஆவார்.

மனிதர்களுக்கு வாழ வழிகாட்டும் கல்வியை
”கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே”
என்று கொன்றை வேந்தன் கூறுவதற்கமைய எத்தகைய இடரையும் தாண்டி கற்க வேண்டும். கல்வியினால் மனித நேயம் வளர்கிறது. சக மனிதர்களை மதிக்கவும் நேர்மையுடன் வாழவும் கல்வி உதவுகின்றது.
”பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல்ல”
என்பதைப் புரிந்து கொண்டு காலத்தை வெற்றி கொண்டு வாழ்வதற்குரிய கல்வியைக் கற்க வேண்டும்.


கல்வி மனித அடிப்படை உரிமைகளில் ஒன்று. அக்கல்வியை வாழக்கற்க வேண்டும். இல்லையேல் பிறந்தும் இறந்தவர் போன்றே ஆகிவிடநேரிடும். மக்களின் நுண்ணறிவும், புத்திக்கூர்மையும், மக்களின் திறமையும் கல்வி மூலமே வளரும். சூழலுக்கு ஏற்ப சிறந்தமுறையில் நடந்து கொள்ளுவதற்குரிய அறிவையும், அனுபவத்தையும் கல்வி தருகின்றது. ஆகையினால் வாழக் கற்க வேண்டும்.

கல்வியானது வாழ்வில் பின்பற்ற வேண்டிய நல்லொழுக்கங்களைத் தருவதோடு தொழிலுக்கும் வழிகாட்டுகின்றது. காலத்துக்கேற்ற வகையில் சிறந்த தொழிலைப்பெற்று நேர்மையுடனும், மேன்மையுடனும் வாழ்வதற்கு கற்கவேண்டும். வாழ வழிகாட்டும் கல்வியே மனிதர்களின் தெரிவாக அமைய வேண்டும். அத்தகைய கல்வியைக் கற்கும் போது வாழ்வு ஒளிமயமானதாக அமையும் என்பது திண்ணம்.

குறிப்பாக ஒழுக்கக் கல்வியையும் அழகியற் கல்வியையும் கற்பதுபோன்று தொழில்வாண்மைக் கல்வியையும் கற்க வேண்டும். சமுதாய பொருளாதார மாற்றங்கள் பற்றி அறிந்து கொள்வதற்கு வாழும் வரை வாழக் கற்க வேண்டும். இல்லையேல் உலகத்தோடு ஒட்டிவாழத் தெரியாதவர்களாகவே இருக்க வேண்டிவரும்.


பல நூல்களைக் கற்றால் மட்டும் போதாது. அதாவது ”ஏட்டுச் சுரக்காய் கறிக்குதவாது”. எனவே அந்நூல்களின் கூறப்பட்டபடி கற்றவர்கள் யதார்த்த வாழ்வைத் தொடர வேண்டும்.

கல்வியினால் குறிப்பிட்ட ஒருவர் மட்டுமின்றி அவர் சார்ந்த சமூகமும் நன்மை பெறுகின்றது. ஒருவரின் வாழ்வுக்கு அவர் கற்ற கல்வி வாழ வழிகாட்டும்போது அதனைப் பின்பற்றி பலரும் வாழ முற்படுபவர். இத்தகைய கல்வியே சிறந்ததாகும்.
”ஒருமைக் கண்தான் கற்ற கல்வி ஒருவருக்கு
எழுமையும் ஏமாப்புடைத்து”
என்பதற்கமைய கல்வியானது ஒருவரோடு அழிந்து போகாது. எனவே அழியாச் செல்வமாகிய கல்வியைக் கற்க வேண்டும்.

மனிதர்களின் மனிதத் தன்மையோடு பலரும் போற்ற வாழவும், காலமாற்றத்தை வெற்றிகொள்ளவும் வாழக்கற்பது தலையாய கடமையாகும். எனவே கற்பதற்கு வயதெல்லை இல்லை என்பதைப் புரிந்து எல்லோரும் வாழக் கற்பது சாலச் சிறந்ததாகும்.

தொகுப்பு:
த.மேகராசா(கவிஞர் மேரா)
வலயக்கல்வி அலுவலகம், மட்டக்களப்பு.