சாதாரண பரீட்சை பெறுபேறுகளை வெளியிட முடியாத நிலை..!

2020 கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் இது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

2020 சாதாரண தரப்பரீட்சையில் 6 இலட்சத்து 22 ஆயிரம் பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தார்கள். இதில் 1 இலட்சத்து 69 ஆயிரம் பரீட்சார்த்திகள் நுண்கலை சார்ந்த பாடங்களைத் தெரிவு செய்திருந்தார்கள்.


தற்சமயம் நிலவும் கொவிட் வைரஸ் பரவலினால் நுண்கலை சார்ந்த பாடங்களை தெரிவு செய்த பரீட்சார்த்திகளுக்கான செய்முறைப் பரீட்சைகள் நடத்தப்படவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.

செய்முறைப் பரீட்சையை நடத்தி பரீட்சார்த்திகளின் பெறுபேறுகளை விரைவில் வெளியிட அரசாங்கம் எதிர்பார்த்திருந்தாலும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது என தொழிற் சங்கங்கள் அறிவித்துள்ளன.


இது மாணவர்களுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதியாகும் என்றும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கூறினார்.

இதேவேளை அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பான அமைச்சரவை தீர்மானம், நீதிமன்ற தீர்ப்புக்களை உதாசீனம் செய்து ஏற்கனவே பல்வேறு பொருளாதார நெருக்கடிகளில் தன்னலம் பாராது செயலாற்றும் அதிபர் ஆசிரியர்களின் வயிற்றிலடிக்கும் அரசாங்கம், தமது சொகுசு வாழ்க்கைக்காக மக்களை திசை திருப்பும் இழிவான வேலைகளை செய்து வருவதாக அதிபர் – ஆசிரிய சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.