வவுனியாவில் இயங்கும் பல அரச அலுவலகங்களில் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று..!

வவுனியாவில் இயங்கும் பல அரச அலுவலகங்களில் கொரோனா தொற்று இனங் காணப்பட்டுள்ளதுடன் அவர்களுடன் தொடர்பிலிருந்த பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளர்.

அந்த வகையில் வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள இலங்கை மின்சார சபையின் மின் பாவனையாளர் சேவை நிலையத்தில் பணியாற்றும் சில உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டதனையடுத்து இலங்கை மின்சார சபையின் மின் பாவனையாளர் சேவை நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.


குறித்த நிலையத்தில் பணியாற்றும் சில உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டதனையடுத்து அவர்களுடன் தொடர்பினை பேணிய 34 ஊழியர்கள், உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


இதேவேளை வவுனியா வடக்கு மற்றும் தெற்கு கல்வி வலயத்தில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப் படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கணக்குக் கிளை முழுமையாக மூடப்பட்டதுடன் ஏனையவர்களுக்கு நேற்றைய தினம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முடிவுகள் இன்றைய தினம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


இது மட்டுமின்றி ஒரு பாடசாலையின் கல்வி சாரா ஊழியருக்கும் தொற்று இனங் காணப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்றானது வேகமாக பரவி வரும் நிலையில் மக்கள் சுகாதார நடைமுறையை பின்பற்றுவதுடன் தேவையற்று வெளியே செல்வதை தவிர்க்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.