கொரோனா தொற்றுக்குள்ளாகும் சிறுவர் தொகை அதிகரிப்பு; சிகிச்சை முறையிலும் மாற்றம்..!

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகும் சிறுவர்களின் எண்ணிக்கை, வெகுவாக அதிகரித்துள்ள நிலையில் இரண்டு வயதுக்கு மேற்பட்ட கொவிட் தொற்றுக்குள்ளாகும் சிறார்களுக்கு அவர்களது வீடுகளிலேயே தங்க வைத்து சிகிச்சை வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ரிஜ்வே ஆர்யா சிறுவர் வைத்திய சாலையின் விசேட வைத்தியர் டொக்டர் ஷன்ன டீ சில்வா தெரிவித்துள்ளார்.


இதன்படி, நோய் அறிகுறிகள் தென்படாத மற்றும் சிறு நோய் அறிகுறிகள் தென்படுகின்ற சிறார்களை வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்துமாறு வைத்தியர்கள் பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொற்றா நோய் மற்றும் நீண்ட கால நோய்களுக்காக சிகிச்சைகளை பெறாத சிறுவர்களுக்கே இவ்வாறு வீடுகளில் சிகிச்சை வழங்க ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


வீடுகளில் சிகிச்சை பெறும் சிறார்களை அவதானித்துக் கொள்ள வேண்டியது, வீட்டிலுள்ள மூத்தவர்களின் பொறுப்பு என்பதுடன், தொலைபேசியூடாக வழங்கப்படும் ஆலோசனைகளுக்கு அமைய சிகிச்சைகளை வழங்கும் நடைமுறையும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.


கொவிட் தொற்றுக்குள்ளாகும் சிறார்களுக்கு சிகிச்சைகளை வழங்கும் வகையிலான ஆலோசனைகளை பெற்றுக் கொள்வதற்காக 1390 என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.