நிறுவனத் தலைவர்களிடம் இராணுவத் தளபதி விடுத்துள்ள உத்தரவு..!

அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் கடமைகளுக்குத் தேவையான ஊழியர்களை மட்டும் அழைக்குமாறு நிறுவனத் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுப்பதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

மேலும், இந்த இக்கட்டான கால கட்டத்தில் விருந்துபசாரங்கள் உள்ளிட்ட பொது நிகழ்வுகளில் கலந்து கொள்வதை தவிர்க்குமாறும் இராணுவத் தளபதி மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


அதிகளவான ஊழியர்களை நிறுவனங்களுக்கு அழைப்பதன் காரணமாக கொரோனா ஆபத்து அதிகரிக்கும் எனவும், எனவே இதை கருத்திற்கொண்டு தேவையான ஊழியர்களை மட்டுமே அழைப்பது தலைவரின் பொறுப்பாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.


இதேவேளை, சில நிறுவனங்கள் அதிக ஊழியர்களை அழைப்பதாக தகவல்கள் வருவதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.


மேலும், இந்த நேரத்தில் நாட்டை மூடுவது பற்றி நாம் பேசக் கூடாது. நாடு மூடப்படாத வகையில் வேலை செய்வது அனைத்து குடிமக்களின் பொறுப்பாகும் என்றும் தெரிவித்த இராணுவத் தளபதி, நாட்டை மூட வேண்டாம் என்று பெரும்பாலான மக்கள் கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை அரச சுற்றுநிரூபத்தை மீறி சில பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் அழைக்கப்படுவதுடன் சில பாடசாலைகள் மாணவர்களை அழைத்து வகுப்புக்கள்/ பரீட்சைகளை தற்துணிவில் நடாத்துகின்றனர். கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுமாயின் அதன் முழுப் பொறுப்பையும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர்கள் ஏற்றுக் கொள்வார்களா?

அத்துடன் வவுனியாவில் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி சாரா ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் உயர்தர மாணவர்கள் பாடசாலைக்கு அழைக்கப்பட்டு பரீட்சைகள் நடைபெற்றுள்ளது. இங்கு ஏதாவது தொற்று ஏற்படும் பட்சத்தில் அதற்கான பொறுப்பினை ஏற்றுக் கொள்பவர் யார்? என சமூக ஆர்வலர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.