வவுனியா மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் – வைத்திய கலாநிதி ராகுலன் கோரிக்கை

நாட்டில் ஒட்சிசன் பற்றாக்குறை ஏற்படகூடிய தருணத்தில் வவுனியா வைத்திய சாலையிலும் ஒட்சிசன் தேவையுடையோர் அதிகரித்து வருகின்றனர் என்று வவுனியா பொது வைத்திய சாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கலைநாதன் ராகுலன் தெரிவித்துள்ளார்.

இந் நிலையில் நாட்டில் கொரொனா மரணங்களும் தொற்றாளர்களும் அதிகரித்து வரும் நிலையில் வவுனியா மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


வவுனியா பொது வைத்தியசாலையில் நாளுக்கு நாள் கொரனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் முதலாவது கொரொனா தொற்றாளர் விடுதி அண்மையில் நோயாளர்களால் நிரம்பியமையால் இரண்டாவது நோயாளர் விடுதியும் கொரனா நோயாளர்களுக்காக திறக்கப்பட்டது.


வவுனியா மாவட்டத்தை சேர்ந்த 60 இற்கும் மேற்பட்ட நோயாளர்கள் மாவட்ட பொது வைத்திய சாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் நால்வர் அதி தீவிர சிகிச்சை பிரிவிலும் 20 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் ஒட்சிசன் தேவையுடையோராகவும் காணப்படுகின்றனர். நால்வர் கொரொனா தொற்றினால் மரணமடைந்துள்ளனர்.


வவுனியா வைத்திய சாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் உட்பட சுகாதார உத்தியோகத்தர்களும் கொரொனா தொற்றுக்குள்ளாவதால் வைத்தியசாலை ‘நிர்வாக இரட்டை கடின நிலையை’ (Double burden of Administration) எதிர்நோக்கியுள்ளது. கடும் மனித வலு பிரச்சினையையும் சந்தித்துள்ளது.


இவ்வாறான சூழலில் மக்கள் நோயாளர் அதிகரிப்பை கட்டுப்படுத்த கடும் பிரயத்தனம் மேற்கொள்ள வேண்டும் என்றும் வவுனியா பொது வைத்திய சாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கலைநாதன் ராகுலன் தெரிவித்துள்ளார்.