பொருட்களை அதிக விலைக்கு விற்றால் உடன் 1977க்கு முறைப்பாடு செய்யுங்கள்..!

நிர்ணயிக்கப்படும் விலையைவிட அதிக விலைக்கு விற்பனை செய்யும் தனி வியாபாரிகள் மற்றும் நிறுவனங்களுக்கான தண்டப் பணம் ஒரு இலட்சம் முதல் 5 இலட்சம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதுதொடர்பான வரத்தமனி அறிவிப்பு நேற்று வெளியிடப் பட்டுள்ளது என நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு ராஜாங்க அமைச்சர் லசன்த்த அழகியவண்ண தெரிவித்தார்.

மக்களின் அத்தியாவசிய பொருட்களான அரிசி மற்றும் சீனிக்கு விலை நிர்ணயம் செய்து 2020 ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது. என்றாலும் நுகர்வோருக்கு குறித்த விலைக்கு சந்தையில் பொருட்கள் கிடைக்கவில்லை.


அதனால் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையினால் நூற்றுக்கணக்கான சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனினும் அதன் மூலம் நாங்கள் எதிர்பார்த்த பயன் கிடைக்கவில்லை. விலை அதிகரித்து விற்பவர்களுக்கான தண்டப் பணம் குறைந்தளவில் இருப்பதே இதற்கு காரணமாகும்.

அதனால் நுகர்வோர் அதிகாரசபை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் எனப் பல தடவைகள் முயற்சிக்கப்பட்டாலும் 20 வருடங்களாக எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை.

தற்போது இந்த சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள குழுவொன்றை அமைத்து 72 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் நுகர்வோரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நிறைவடையும் என எதிர்பார்க்கின்றோம்.


இருந்தாலும் இந்த சட்டத்தில் இருக்கும் தண்டப்பணம் அதிகரிப்பது தொடர்பான சரத்துக்களை மாத்திரம் திருத்தம் மேற்கொள்ள வரத்தக அமைச்சரால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்துக்கு அனுமதி கிடைத்ததால் தற்போது அந்த திருத்தங்களை செய்து, தற்போது வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப் பட்டிருக்கின்றது. அதன் பிரகாரம் உடன் அமுலுக்கு வரும் வகையில் தண்டப் பணம் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது.

நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட எந்தவொரு பொருளையும் அதிக விலைக்கு விற்பனை செய்தால் அதுதொடர்பில் 1977 என்ற துரித இலக்கத்துக்கு முறைப்பாடு செய்யலாம்.

புதிய தண்டப்பண திருத்தம் தனி வியாபாரி என்றால் ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. நிறுவனமாக இருந்தால் 10ஆயிரம் முதல் ஒரு இலட்சம் வரை அதிகரிக்கப்பட்டிருக்கின்றது.


அதனடிப்படையில், நிர்ணயிக்கப்பட்டிருக்கும் குறைந்த சில்லறை விலையை விட கூடுதான விலைக்கு விற்பனை செய்த குற்றத்துக்கு இதுவரை இருந்த தண்டப்பணம் ஆயிரம் ரூபாவில் இருந்து 10 ஆயிரம் வரையாகும். புதிய வர்த்தமானி அறிவிப்பின் பிரகாரம் ஆகக் குறைந்த தண்டப்பணம் ஒரு இலட்சம் ரூபாவாகவும் ஆகக் கூடியது 5 இலட்சம் ரூபா எனவும் திருத்தப்பட்டிருக்கின்றது.

அதே நபர் இரண்டாவது தடவையாகவும் அந்த குற்றத்தை செய்தால் தற்போது இருக்கும் 2ஆயிரம் முதல் 20ஆயிரம் ரூபா தண்டப்பணம் இரண்டு இலட்சம் முதல் 10இலட்சம் வரை திருத்தப்பட்டிருக்கின்றது.

அதேபோன்று ஒரு நிறுனம் இந்த குற்றத்துக்கு ஆளானால் தற்போது இருக்கும் 10ஆயிரம் ரூபா முதல் ஒரு இலட்சம் ரூபா வரையான தண்டப்பணம் 5 இலட்சம் முதல் 50இலட்சம் வரை திருத்தப்பட்டிருக்கின்றது.


அதே நிறுவனம் இரண்டாவது தடவையாகவும் குறித்த குற்றத்துக்கு ஆளானால் தற்போது இருக்கும் 20ஆயிரம் முதல் 2இலட்சம் தண்டப்பணம் 10இலட்சம் முதல் 100இலட்சம் வரை திருத்தப்பட்டிருக்கின்றது .

அதன் பிரகாரம் தற்போது நிர்ணயிக்கப்பட்டிருக்கும் அரிசியின் விலையை அதனை விட அதிக விலைக்கு விற்பனை செய்தால் இந்த தண்டப்பணம் விதிக்கப்படும். அதேபோன்று சீனிக்கான நிர்ணய விலையும் விரைவில் அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என்றார்.