வேதன பிரச்சினை தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இன்று அறிவிக்கப்படும் – ஜோசப் ஸ்டாலின்

இதுவரையில் தீர்க்கப்படாத தமது வேதன பிரச்சினை தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள புதிய நடவடிக்கை குறித்து, இன்று கூடி தீர்மானம் மேற்கொள்ள உள்ளதாக, ஆசிரியர் – அதிபர் தொழிற் சங்கங்கள் தெரிவித்துள்ளன.


ஆசிரியர் – அதிபர் சம்பளப் பிரச்சினை தொடர்பான அமைச்சரவையின் தீர்மானம், அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் டலஸ் அழகப்பெரும நேற்று (24) தெரிவித்திருந்தார்.


சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு கோரி, ஆசிரியர் – அதிபர் தொழிற் சங்கங்கள் முன்னெடுத்துள்ள இணையவழி கற்பித்தல் பணிப் புறக்கணிப்பு தொழிற்சங்க நடவடிக்கை இன்று 45 ஆவது நாளாகவும் தொடர்கிறது.


இந் நிலையில், இன்று ஆசிரியர் – அதிபர் தொழிற் சங்கங்கள் கூடி தங்களது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராய்ந்து அறிவிக்க உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.