கொவிட் நிதியத்திற்கு எனது சம்பளத்தை அளித்தால் உயிர் வாழ முடியாது – ஆளும் கட்சியின் எம்.பி எதிர்ப்பு

கொவிட் நிதியத்திற்கு முழுச் சம்பளத்தையும் வழங்குவதற்கு ஆளும் கட்சியின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரான டிலான் பெரேரா இந்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.


கொழும்பில் உள்ள பொதுஜன முன்னணியின் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை நடந்த ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

“இன்று அரசியல்வாதிகள் பலரும் சம்பளத்தை கொவிட் நிதியத்திற்காக அன்பளிப்பு செய்கின்றனர். எனக்கு சம்பளத்தை முழுவதும் அளிக்க முடியாது அவ்வாறு முழு சம்பளத்தையும் அளித்தால் என்னால் உயிர்வாழ முடியாதென்பதால் அரைச் சம்பளத்தை அன்பளிப்பு செய்கின்றேன்.


எனது தந்தையார் த பினான்ஸ் நிறுவனத்தில் முதலிட்டதால் நட்டமடைந்தார். அதனால் இன்று முழுச் சம்பளத்தையும் நிதியத்திற்கு அளித்துவிட்டால் நான் பொருளாதார பக்கத்தில் சிரமத்தை எதிர் கொண்டு விடுவேன்” என அவர் தெரிவித்தார்.


இதேவேளை சிறுவர், மகளிர் விவகார இராஜாங்க அமைச்சரான பியல் நிஸாந்தவும் கொவிட் நிதியத்துக்கு தனது சம்பளத்தை வழங்க முடியாதென தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.