சுய கட்டுப்பாடுகளை அரசாங்க உத்தியோகத்தர்களும் பொது மக்களும் பின்பற்ற வேண்டும்..!

உறவுகள், உரிமைகள் என்பதைவிட சுய கட்டுப்பாடுகளை அரசாங்க உத்தியோகத்தர்களும் பொது மக்களும் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தினை உணர்ந்து கொள்ள வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.


கொரோனா தொற்று பாரிய தாக்கங்களை ஏற்படுத்தி வருவதன் காரணமாக சுகாதார துறையினருக்கும் பாதுகாப்பு துறையினருக்கும் ஒத்துழைத்து சுய கட்டுப்பாடுகளுடன் செயற்பட்டால் வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சில அரசாங்க உத்தியோகத்தர்களும், பொது மக்களும் அரசாங்கத்தின் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை மீறி கவலையீனமாக நடந்து கொள்வதாக பொலிஸாரினால் சுட்டிக் காட்டப்பட்டதற்கு இணங்க கட்டுப்பாடுகளை மிகவும் இறுக்கமாக கடைபிடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம்.


இது மிகவும் கொடூரமான அலை, இலங்கை உட்பட உலக நாடுகளில் பரவி வருகின்றது. ஆகவே இந்த ஊரடங்கு சட்டத்தினை கடைப்பிடித்து சுகாதார துறையினருக்கு ஒத்துழைத்து நாங்களும் சுயகட்டுப்பாட்டுடன் வாழ்ந்தால் தான் நாங்கள் இந்த தொற்றினை கட்டுப்படுத்த முடியும் எனவும் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து வைத்தியசாலைகள் ஊடாக எந்த வேளையிலும் தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது.


இராணுவத்தின் உதவியுடன் நடமாடும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளும் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவளை கொவிட் என்பது சாதாரண காய்ச்சல் என சர்ச்சையான கருத்தினை மொட்டின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.