இலங்கை விசா கட்டணம் மற்றும் அபராதங்களில் திருத்தம்..!

விசா இல்லாமல் அல்லது விசா காலத்திற்கு அப்பால் இலங்கையில் தங்கியிருக்கும் நபர்களுக்கான விசா கட்டணத்துடன் கூடுதலாக 500 அமெரிக்க டொலர் கட்டணம் அபராதமாக வசூலிக்க குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் முடிவு செய்துள்ளது.

18 ஆம் திகதி வெளியிடப்பட்ட புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப விசா கட்டணம் மற்றும் அபராதம் திருத்தப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்தது.


முதல் வகை குடியிருப்பு விசாவின் கீழ், முதலீட்டாளர்கள், முதலாளிகள், மாணவர்கள், மருத்துவம் பெறுபவர்கள், தொண்டு நிறுவனங்கள், முகவர்கள் மற்றும் மத நடவடிக்கை தொடர்பானவர்களுக்கு ஆண்டுக்கு 200 அமெரிக்க டொலர் கட்டணம் அறவிடப்படும்.

இரண்டாவது மற்றும் மூன்றாவது குடியிருப்பு விசாக்களுக்கு தலா 100 அமெரிக்க டொலர்கள் செலவாகும். மதகுருமார்கள் மற்றும் வெளிநாட்டு வாழ்க்கைத் துணைவர்கள் அல்லது இலங்கை குடிமகனை மணந்திருக்கும் சார்புடைய பிள்ளைகள் விசா கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.


சுற்றுலா விசாவின் கீழ், தெற்காசிய பயணிகள் ஒன்லைன் விசாவைப் பெற 20 அமெரிக்க டொலர்களும், வருகைக்குப் பிறகு விசாவைப் பெற 25 அமெரிக்க டொலர்களும் செலுத்த வேண்டும்.

தெற்காசிய நாடுகள் அல்லாத நாடுகளின் உறுப்பினர்கள் ஒன்லைனில் விசா பெற 35 அமெரிக்க டொலர் மற்றும் வருகை விசாவில் 40 அமெரிக்க டொலர் செலுத்த வேண்டும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.