அரசின் கபடத்தனமான தீர்மானத்தை முழுமையாக நிராகரித்த அதிபர் ஆசிரியர் தொழிற் சங்கங்கள்..!

அதிபர் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் அமைச்சரவையால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நிராகரிப்பதாக அறிவித்துள்ளது.

ஆசிரியர் சேவை, ஆசிரியர் ஆலோசகர் சேவை மற்றும் அதிபர் சேவை ஆகியவற்றை வரைவிட்ட சேவையாக (Closed Service) வர்த்தமானியில் அறிவிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.


இதற்கமைய, எதிர்வரும் நவம்பர் 20 ஆம் திகதிக்கு முன்னர் அதனை மட்டும் வர்த்தமானியில் அறிவிக்க அமைச்சரவையின் அனுமதியும் கிடைத்திருந்தது.

அதேவேளை இடைக்காலக் கொடுப்பனவாக செப்ரெம்பர், மற்றும் ஒக்டோபர் ஆகிய இரு மாதங்களுக்கு மட்டுமே வழங்குவதாகவும் 2022 பாதீட்டில் 5000ரூபாயை பகுதி பகுதியாக வழங்குவோம் என கூறப்பட்டுள்ளது. எனினும் இக் கொடுப்பனவு நவம்பர், டிசம்பர் மாதங்களுக்கு வழங்கப்படாது.


இது தற்போது தடைப்பட்டுள்ள சாதாரண தர செயன்முறைப் பரீட்சை, உயர்தரப் பரீட்சை, புலமைப் பரிசில் பரீட்சை என்பவற்றை நடாத்துவதற்கான ஒரு அவசர ஏற்பாடாகவே காணப்படுகின்றது.

இதேவேளை அதிபர்-ஆசிரியர்கள் இந்த இடைக்கால நிவாரணக் கொடுப்பனவை கோரவில்லை மாறாக பிரச்சினைக்கான நிதந்தர தீர்வையே எதிர்பார்க்கின்றனர்.


இந்நிலையில் இந்த தீர்மானத்திற்கு அதிபர் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் அரசின் இந்த கபடச் செயற்பாட்டிற்கு தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

30.08.2021 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

07. ‘அதிபர்-ஆசிரியர் சேவைகளில் காணப்படும் சம்பள முரண்பாடுகளை நீக்குதல்’ தொடர்பாக அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட உபசெயற் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல்

‘அதிபர்-ஆசிரியர் சேவைகளில் காணப்படும் சம்பள முரண்பாடுகளை நீக்குதல்’ தொடர்பாக ஆராய்ந்து அமைச்சரவைக்கு பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப செயற்குழு அதிபர், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்களின் 33 தொழிற் சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு கீழ்வரும் தீர்மானங்களை எட்டியுள்ளது.

• அமைச்சரவை உபசெயற்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்துவதை கொள்கை ரீதியாக அங்கீகரித்தல்

• ஆசிரியர் சேவை, ஆசிரியர் ஆலோகர் சேவை மற்றும் அதிபர் சேவைகள் போன்றவற்றை வரைவிட்ட சேவையாக 2021 நவம்பர் மாதம் 20 திகதிக்கு முன்னர் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடல்

• அமைச்சரவை உப செயற்குழு மூலம் அதிபர்-ஆசிரியர் சம்பள முரண் பாட்டை நீக்குவதற்காக பரிந்துரைக்கப்பட்ட சம்பளத் திருத்தங்கள், 2022 வரவ செலவுத் திட்டத்தின் மூலம் படிப்படியாக நடைமுறைப் படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்

• 2021 செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் தமது கடமைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு 5,000/= ரூபா விசேட கொடுப்பனவு செலுத்துதல்

• உப செயற்குழுவின் இதர யோசனைகள் மாகாண சபைகள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களுடன் இணைந்து கல்வி அமைச்சின் மூலம் 06 மாதங்களில் நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்