மாணவர்களின் தடுப்பூசிகள் அம்பாந்தோட்டைக்கு; ஆசிரியர்கள் தமது உரிமைக்காகவே போராடுகிறார்கள்..!

இலங்கையின் இளம் அமைச்சரின் தேவைக்காகவா அம்பாந் தோட்ட மாவட்டத்திற்கு பைஸர் கொவிட்-19 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. பாடசாலை மாணவர்களுக்கு பொருத்தமானது என அங்கிகரிக்கப்பட்டுள்ள பைஸர் தடுப்பூசியை மாணவர்களுக்கு வழங்கி எதிர்வரும் ஜனவரி மாதம் பாடசாலைகளை திறப்பதற்கான நடவடிக்கையினை அரசாங்கம் பொறுப்புடன் முன்னெடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட்-19 தடுப்பூசி விடயத்தை அரசாங்கம் தனது அரசியல் தேவைக்காக பயன்படுத்திக் கொள்வதை முதலில் தவிர்த்துக் கொள்ள வேண்டும். கொவிட் விடயத்தில் அரசியல் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டதன் விளைவை இன்று நாட்டு மக்கள் எதிர்க் கொள்கிறார்கள்.

கொவிட் தடுப்பூசி இன்று அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளன. அரசியல் வாதிகளின் தேவைக்காக கொவிட்-19 தடுப்பூசிகள் பகிர்ந்தளிக்கப்படுகின்றன. சுகாதார தரப்பினரது ஆலோசனைக்கு அமைய தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.


இளம் அமைச்சரின் தேவைக்காகவா பைஸர் தடுப்பூசிகள் அம்பாந் தோட்டை மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. கொவிட் தடுப்பூசி வழங்கலில் ஆரம்பத்தில் இருந்து முறைக்கேடுகள் இடம் பெற்றுள்ளன.

பைஸர் தடுப்பூசி பாடசாலை மாணவர்களுக்கு வழங்கலாம் என அங்கிகரிக்கப்பட்டுள்ளது. ஆகவே பாடசாலை மாணவர்களுக்கு துரிதமாக பைஸர் தடுப்பூசிகளை வழங்கி எதிர்வரும் ஜனவரி மாதம் பாடசாலைகளை திறப்பதற்கான நடவடிக்கையினை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.


ஆசிரியர்கள் தங்களின் உரிமைகளுக்காகவே போராடுகிறார்கள். இவர்களின் கோரிக்கைக்கு தீர்வு வழங்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. மாறாக ஆசிரியர்களை படுமோசமானவர்கள் என்றும், கொவிட் வைரஸ் பரவலை தீவிரப் படுத்தியவர்கள் என்றும் ஆளும் தரப்பினர் விமர்சிக்கின்றார்கள். இவை முற்றிலும் வெறுக்கத்தக்க செயற்பாடு.

ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்துக் கொண்டதனால் தான் கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளாக்கி மரணித்துள்ளார்கள் என அரசாங்கத்திற்கு ஆதரவானவர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளமை எதிர்கால தலைமுறையினரது கல்விக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே ஆசிரியர்கள் விவகாரத்தில் அரசாங்கத்தில் கௌரவமாக நடந்துக் கொள்ள வேண்டும்என்றார்.