வடக்கு மக்களுக்கு எதிரான வன்முறைகளில் யாராவது ஈடுபட்டால் உடன் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்..!

வடக்கில் பொது மக்களுக்கு எதிரான வன்முறைகளில் எவராவது ஈடுபடுவார்களாயின் அதற்கெதிராக தெளிவான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர், அபிவிருத்திக் கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இன்று (09) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் அங்கு இடம் பெறும் சமகால அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிட்ட பின்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் இது தெடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

சிலருக்கு பிரச்சினைகள் இருக்குமாயின் பொலிசில் முறைப்பாடு செய்ய முடியும். நாட்டின் பொது மக்களின் பாதுகாப்பே முக்கியம். இதே போன்று தேசிய பாதுகாப்பு முதலாவது விடயம். அமைதிக்கு எதிரான பிரச்சினை இருக்குமாயின் பொலிசில் முறைப்பாடு செய்யுங்கள் தெளிவான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கூறினார்.


கொவிட் தொற்று பரவலை தடுப்பதற்காக அரசாங்கம் பாரிய நடவடிக்கைகளை நாடு முழுவதும் மேற்கொண்டுள்ளது. தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது யாழ்ப்பாணத்திலும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம் பெற்று வருகிறது.

நாட்டின் இளம் சமூகத்தினருக்கு தடுப்பூசி வழங்கும் செயல் திட்டமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ் மக்களும் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி செயல்பட்டு நாட்டின் பொருளாதாரத்தை வலுவூட்ட ஒன்றிணைந்து செயல்படுமாறு கேட்டுக் கொள்வதாக அமைச்சர் நாமல் அங்கு குறிப்பிட்டார்.

நாட்டில் நாளொன்றுக்கு ஆகக்குறைந்தது 400 மத்திய நிலையங்களில் கொவிட் தடுப்பூசி ஏற்றப்படுகின்றன. இவ்வாறான சூழ்நிலையில் தான் கௌரவ ஜனாதிபதி சௌபாக்கிய வேலைத் திட்டத்தை முன்னெடுத்துள்ளார்.


தற்போது இது வரையில் 280 பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதே போன்று சிறியளவிலான அபிவிருத்தித் திட்டங்கள் சுமார் 25 ஆயிரம் அமைச்சுக்கள் ஊடாக உள்ளூராட்சி மன்றங்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்துமாறு கௌரவ ஜனாதிபதி பந்துல குணவர்தன அமைச்சருக்கு விசேட ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

பொருட்கள் பதுக்கப்படுமாயின் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். இன்று நாட்டின் தேசிய பொருளாதாரம் வலுப்படுத்தப் பட்டுள்ளது. இதேபோன்று தேசிய வர்த்தகமும் வலுவடைந்துள்ளது.

அபிவிருத்தித் திட்ட நடவடிக்கைகள் எவ்வாறு இடம் பெறுகின்றன என்பதை கண்டறிவதற்காகவே யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்தோம். இவற்றில் ஏதேனும் குறைபாடுகள் இருக்குமாயின் அவற்றை அடையாளங் கண்டு அவற்றுக்கு ஆவண செய்வதுடன் ஜனாதிபதி அறிமுகப்படுத்திய வேலைத் திட்டங்களை யதார்தமாக்கும் நடவடிக்கைகளை செயல்படுத்துவதும் நோக்கமாகும்.


எதிர்வரும் காலப் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்கள் ஆகியோரின் ஒத்துழைப்பு மற்றும் கண்காணிப்புடன் உரிய நேரத்தில் சிறப்பாக அபிவிருத்தி நடவடிக்கைகளை நிறைவு செய்து கிராம மக்களின் அபிவிருத்திக்கு வழி செய்வதே எமது அபிலாசையாகும் என்று இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அபிவிருத்திக் கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்