போலி அதிபர்-ஆசிரியர் கொவிட் கொத்தணியை உருவாக்காது சம்பளப் பிரச்சினைக்கு தீர்வை வழங்குங்கள்..!

சீனி, அரிசி மற்றும் நெல் மாபியாவை ஒடுக்குவதாகக் கூறி நாடாளு மன்றத்தில் அவசரகால சட்டத்தை நிறைவேற்றிய அரசு, ஆசிரியப் போராட்டக் காரர்களுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

ஆசிரியர் – அதிபர் சேவைகளில் உள்ள சம்பள முரண்பாடுகளை நீக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து, அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களும் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்து சுமார் இரண்டு மாதங்கள் கடந்துள்ளன.


கொரோனா தொற்றுநோய் பரவல் காரணமாக ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதை அரசாங்கம் தாமதப்படுத்துவதாக ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் போராட்டம் காரணமாக கொரோனா தொற்றுக்குள்ளான ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளதாக உறுதிப் படுத்துவற்காக, காவல்துறையினரைப் பயன்படுத்தி ஆசிரியர்களையும் அதிபர்களையும் அச்சுறுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சி கவலையளிப்பதாக ஆசிரியர் சங்கத் தலைவர்களான ஜோசப் ஸ்டாலின் மற்றும் மஹிந்த ஜெயசிங்க ஆகியோர் கையொப்பமிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


“குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைக்கு உண்மைகளை வெளிக் கொண்டு வரும் வகையில் ஒரு அறிக்கையை பெறுவதற்கான அழைப்பு” என்ற தலைப்பில் ஹொரணை, இங்கிரிய, மதுரவல மற்றும் மில்லனிய ஆகிய பிரதேச செயலாளர்களுக்கு, ஹொரணை தலைமையகத்தின் காவல்துறை பரிசோதகரால் செப்டெம்பர் 4 ஆம் திகதி ஒரு கடிதத்தை அனுப்பி, ஜூலை 25 மற்றும் ஒகஸ்ட் 5 ஆகிய திகதிகளில் நடைபெற்ற கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் நடைபெற்ற இடங்கள், பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை, மற்றும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் குறித்த எண்ணிக்கை தொடர்பிலான தகவல்கள் கோரப்பட்டுள்ளன.

04.08.2021 அன்று ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் வாகன அணி வகுப்பில் பங்கேற்று திரும்பிக்கொண்டிருந்த 44 ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கொழும்பு துறைமுக காவல் துறையினரால் கட்டாயமாக கைது செய்யப்பட்டதோடு, அன்டிஜன் சோதனைகளை நடத்தி அவர்களில் கொரோனா தொற்றாளர்களை கண்டறிய முயற்சித்ததாக சுட்டிக் காட்டியுள்ளனர்.


போராட்டங்களில் பங்கேற்ற 25 ஆசிரியர்கள் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன செப்டெம்பர் 07ஆம் திகதி நாடாளுமன்றத்தில் வெளியிட்ட தவறான கருத்தும், அரசாங்க சார்பு ‘சிலுமின’ பத்திரிகையில், அரசு சார்பு பொது கல்வி ஊழியர் சங்கத்தின் தலைவர் வசந்த ஹந்தபான்கொடவை மேற்கோள்காட்டி வெளியான பொய்யான செய்தியும், கொரோனா கொத்தணி உருவாகியதாக காட்டும் முயற்சியே” என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆசிரியர் கொத்தணியை உருவாக்க முயற்சிக்காமல் ஆசிரியர்-அதிபர் சம்பளப் பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வைக் கண்டறியுமாறு, கொரோனா பரவுவலைத் தடுக்க முடியாத அரசாங்கத்திடம், ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.