ஜனாதிபதியுடன் சொந்தச் செலவில் அமெரிக்கா செல்லும் அயோமா ராஜபக்ஷ..!

ஐக்கிய அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ள ஐநா பொதுச் சபையின் 76 வது அமர்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கலந்துக் கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள குறித்த அமர்விலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கலந்துக் கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐ.நா பொதுச் சபையில் உரையாற்றவுள்ளமை இதுவே முதன் முறையாகும்.

இந்த விஜயத்தின் போது பொருளாதாரம், கல்வி, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பில் அரச தலைவர்கள் சிலருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், ஜனாதிபதி ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் வெளிவிவகார செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆகியோரும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்.


தமது தனிப்பட்ட கொள்கை மற்றும் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை கருத்திற் கொண்டு, குறைந்தளவான தூதுக் குழுவினர் மாநாட்டில் கலந்துகொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.


இதேவேளை, ஜனாதிபதியின் பாரியார் அயோமா ராஜபக்ஷ, தனது சொந்தச் செலவில் இந்த விஜயத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.