பாடசாலைகள் விரைவில் ஆரம்பம்; நிபுணர் குழுவின் அறிக்கை 17ம் திகதி கையளிக்கப்படும்..!

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் முன் மொழிவுகள் முன் வைக்கப்பட்ட போதிலும் எந்தப் பிரிவை ஆரம்பிப்பது என்பது தொடர்பில் தீர்மானம் எதுவும் எட்டப்படவில்லை என தெரிய வருகிறது.

இதன்படி தரம் 7 முதல் தரம் 13 வரை முதலில் திறக்க வேண்டும் என்பது ஒரு பரிந்துரையாகவும் 1, 2, 3 மற்றும் 4 ஆம் தரங்களை முதலில் திறக்க வேண்டும் என்ற மற்றொரு திட்டமும் முன் வைக்கப் பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.


பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர் குழு ஏலவே சுகாதார துறை தலைவர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளுடன் கலந்துரையாடலை தொடங்கியுள்ளது.

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது சம்பந்தமாக ஆராயும் குழுவின் அறிக்கை எதிர்வரும் 17ம் திகதி கொவிட் வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் ஜனாதிபதி செயலணியிடம் கையளிக்கப்படவுள்ளது.


சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் இக் குழு கூடி விரிவாக ஆராய்ந்துள்ளது. கல்வி அதிகாரிகள், சிறுவர் நோயியல் தொடர்பான விசேட வைத்திய நிபுணர்கள், தொற்று நோய் தடுப்பு நிபுணர்கள், குடும்ப சுகாதார அதிகாரிகள், அரச வைத்திய அதிகாரிகள் சங்கப் பிரதிநிதிகளும் இது தொடர்பான பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர்.


அடுத்த வாரம் சுகாதார அமைச்சர் இந்தக் குழுவைச் சந்திக்க உள்ளார் என்பதுடன் பாடசாலைகள் திறப்பது தொடர்பாக பல முன்மொழிவுகள் பெறப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் கூறினார்.