25 ஆயிரம் கல்வி சாரா ஊழியர்கள் இதுவரை தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளவில்லை..!

பாடசாலைகளில் சிற்றுண்டிச் சாலைகளை நடத்துபவர்கள் , பாடசாலை போக்குவரத்து சேவையில் ஈடுபடுபவர்கள் மற்றும் ஏனைய சிற்றூழியர்கள் உள்ளிட்ட கல்வி சாரா ஊழியர்களில் சுமார் 25,000 பேர் இன்னமும் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளவில்லை என்று தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இவ்வாறானவர்கள் துரிதமாக தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக் குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.


அத்தோடு 12 – 18 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் பணிகளை சிறுவர் தொடர்பான விசேட வைத்திய நிபுணர்கள் காணப்படுகின்ற வைத்திய சாலைகளிலேயே வழங்க வேண்டும்.

அவ்வாறான நடவடிக்கை எடுத்தால் மாத்திரமே தடுப்பூசி வழங்கிய பின்னர் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டாலும் உடனடியாக உரிய நடவடிக்கைகளை எடுக்கக் கூடியதாக இருக்கும் என்றும் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் சுட்டிக் காட்டினார்.


பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தற்போது கல்வி அமைச்சின் கீழுள்ள கல்வி சார் மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்கான தடுப்பூசி வழங்கும் பணிகள் நிறைவடையும் தருவாயிலுள்ளன.

எனினும் இதன் போது பாடசாலைகளில் சிற்றுண்டிசாலைகளை நடத்துபவர்கள், பாடசாலை போக்குவரத்து சேவையில் ஈடுபவர்கள் மற்றும் ஏனைய சிற்றூழியர்கள் உள்ளிட்ட சுமார் 25 000 பேர் இன்னும் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளவில்லை என்று எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.


இவ்வாறானவர்களுக்கு இடையூறின்றி தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பினை உரிய தரப்பினர் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

இவை தவிர பாடசாலைகளை எவ்வாறு ஆரம்பிப்பது என்பதற்கான பொறிமுறையும், அதற்கேற்ப மாணவர்களுக்கு எவ்வாறு கட்டம் கட்டமாக தடுப்பூசியை வழங்குவது என்பதற்கான பொறிமுறையும் உருவாக்கப்பட வேண்டும்.