கடந்த இரு மாதங்களாக அதிபர்-ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்குமாறு கோரி ஜனநாயக வழியிலே போராடிய போது அதிபர்-ஆசிரியர்கள் அரச இயந்திரத்தின் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட்டனர். பல்வேறு வழிகளிலே அச்சுறுத்தப்பட்டனர். இன்றும் அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன.
அது மட்டுமன்றி இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்ரார்லின் மற்றும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜெயசிங்க கைது செய்யப்பட்டனர், சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக பெண் ஆசிரியர்கள் உட்பட பல அதிபர் ஆசிரியர்களை சிறையில் அடைத்தது.
அது மட்டுமின்றி பெண்களின் சட்டைகளை கிழித்தும் அராஜகங்களில் ஈடுபட்டது. இதற்கு கூறப்பட்ட காரணம் கூட்டமாக கூடி கொராணாவை பரப்புகின்றனர் என்பதாகும்.
இந் நிலையில் கடந்த கிழமை இலங்கையின் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் கடந்த காலத்தில் அதிபர்-ஆசிரியர் சம்பள போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் விபரங்களை உடன் சேகரிக்குமாறு உயர் மட்ட அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
இந் நிலையில் இன்றைய தினம் இலங்கை அரசாங்கத்தின் அனுமதியுடன் பார்கள் திறக்கப்பட்டு சாராய வர்த்தகம் சிறப்பாக பொலிஸ் பாதுகாப்புடன் நாடளாவிய ரீதியில் இடம் பெற்றுள்ளது.
இன்றைய சூழலில் கடும் பொருளாதார நெருக்கடியில் மக்கள் இருக்கின்ற நிலையில் இத்தகைய சாராய கடைகளை அரசு திறந்ததன் நோக்கம் என்ன? மரத்திலிருந்து வீழ்ந்தவனை மாடேறி மிதித்த கதையாக கொரோனா முடக்கலால் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் மக்களின் வயிற்றில் அடிக்கும் இழி செயலையே இந்த அரசாங்கம் செய்துள்ளது.
வர்த்தக நிலையங்களை திறக்கக் கூடாது என வர்த்தகர்களின் வயிற்றிலும், பொருட்களின் விலைகளை அதிகரித்து நாட்டு மக்களின் வயிற்றிலும் அடித்த அரசாங்கம் இன்று இந்த பார்களை திறந்து மக்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.
மேலும் இன்றைய தினம் பார்கள் திறக்கப்பட்டதை கேள்வியுற்ற மக்கள் பெரும் திரளாக சமூக இடைவெளி என்றால் என்ன என்று கேட்கும் வண்ணம் செயற்பட்டனர். அதற்கு பொலிஸ் பாதுகாப்பு வேறு வழங்கப்பட்டது. இதுவா ஆட்சியின் இலட்சணம்?
கடந்த காலத்தில் ஆசிரியர் போராட்டங்களின் போது கொரோனா கொத்தணி என ஓலமிட்ட அரச தரப்பிற்கு இந்த பார் கொத்தணி கண்ணில் தெளியவில்லையா? இந்நிலையில் ஏன் தேவையற்ற முடக்கத்தை போட்டு அப்பாவி மக்களின் வயிற்றில் அடிக்கின்றீர்கள்? இது அறத்தின் பாற்படுமா? இதுதான் மக்களாட்சியா? என கேட்கின்றனர்.
எனவே இந்த பார்க் கொத்தணிக்கு பொறுப்பேற்று குறித்த துறைக்கு பொறுப்பானவர்கள் உடன் பதவி விலக்கப்பட வேண்டும், இதற்காகவா 69 இலட்சம் மக்கள் தங்களுக்கு வாக்களித்தனர்? இலங்கையில் இன்று முதல் சாராயமும் அத்தியாவசிய சேவைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதா? இது ஆசியாவின் ஆச்சரியம் அல்ல; உலகின் ஆச்சரியம் என்பதே உண்மை.