இருண்ட யுகத்தை நோக்கி தள்ளப்பட்டுள்ள இலங்கையின் கல்வி – சஜித் குற்றச்சாட்டு

இலங்கையின் மொத்தக் கல்வித்துறையும் முகம்கொடுப்பது வாரலாற்றின் இருண்ட யுகமே என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

நாட்டை ஆட்சி செய்கின்ற அரசாங்கத்துக்கும் அதன் தலைவர்களுக்கும் கல்வித் துறையில் காணப்படுகின்ற பிரச்சினையில் இருந்து இலங்கையை மீட்பதற்கு நியாயமான வேலைத் திட்டங்கள் இருப்பதாகவும் தெரியவில்லை எனவும் அவர் மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

அரசாங்கம் கல்வித் துறையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தயக்கம் காட்டுவதன் மூலம் குழந்தைகளின் கல்வியை அரசாங்கம் மழுங்கடிப்புச் செய்கின்றது.

இன்று இலங்கையின் முழு கல்வித் துறையும் அதன் வரலாற்றில் இருண்ட சகாப்தத்தை எதிர் கொள்கிறது. ஆளும் அரசாங்கத்திற்கும் அதன் தலைவர்களுக்கும் இலங்கையை கல்வி நெருக்கடியிலிருந்து காப்பாற்ற ஒரு சாதகமான திட்டம் இருப்பதாக தெரியவில்லை.


இந்த துரதிருஷ்டவசமான கல்வி நெருக்கடியின் தற்போதைய மற்றும் எதிர்கால விளைவுகளின் தீவிரம் மற்றும் பேரழிவை இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பது கேவலமானது. நாட்டின் ஏழை மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மையால் பல தசாப்தங்களாக அனுபவித்து வந்த இலவசக் கல்வி சலுகையிலிருந்து விலக்கப்படுகிறார்கள்.

பாடசாலை மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்குதல், சத்தான உணவு வழங்குதல் மற்றும் பாதுகாப்பு, நலத்திட்டம் உட்பட பல்வேறு நலத் திட்டங்களில் இருந்து ஆசிரியர்கள் விலகியிருக்கின்றனர்.

இந்த நாட்டில் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் நீண்ட காலமாக அவர்கள் எதிர்கொண்டிருக்கும் ஊதிய சமத்துவமின்மை பிரச்சினையை தீர்க்க தொழிற் சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.


கோவிட் தொற்றுநோயை எதிர்கொண்டு அரசாங்கம் கல்வியைப் பாதுகாக்கத் தவறிய போது, ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கடினமான சூழலிலும் வழங்கிய ஒன்லைன் கல்வியைக் கூட ​​நாட்டின் குழந்தைகள் இன்று இழந்து விட்டனர்.

சம்பள முரண்பாடுகளின் பிரச்சினையை தீர்ப்பதில் அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை மற்றும் தீர்வுகளை வழங்காமல் குழுக்களை நியமிப்பதை தாமதப்படுத்துவதாக தெரிகிறது.

இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண்பது மற்றும் நிபுணர் குழுக்களால் முன் மொழியப்பட்ட ஊதிய சமத்துவமின்மை பிரச்சினையை தீர்ப்பது மற்றும் பள்ளி மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாப்பது ஆட்சியாளர்களின் பொறுப்பாகும்.

இப்போது, ​​இந்த நாட்டில் 43 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பாடசாலைப் படிப்பை இழந்துள்ளனர். ஊதிய சமத்துவமின்மைக்கான போராட்டம் மற்றும் அதைச் சமாளிக்க அரசாங்கம் சாதகமான நடவடிக்கைகளை எடுக்காத சூழலில் சுமார் இரண்டு மாதங்களாக குழந்தைகள் ஆன்லைன் கல்வியை இழந்துள்ளனர்.


பல்கலைக் கழகங்கள் மற்றும் பிற பொது மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. கல்வியின் இழப்பு பள்ளி மாணவர்கள், உயர் கல்வி பயிலும் இளைஞர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் மிகுந்த ஏமாற்றத்தையும் விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள இந்த தொய்வு குழந்தைகளின் உடல், உள வளர்ச்சியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது இது நாட்டின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதும் மிகவும் தெளிவாக உள்ளது.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தமது சம்பள முரண்பாடுகளுக்கு ஒரு நியாயமான தீர்வை உறுதி செய்வதற்கும், நாட்டின் குழந்தைகளின் கல்விக்கான உரிமையை உறுதி செய்வதற்கும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வருகிறார்கள்.

மாணவர்களின் கல்வி உரிமை மற்றும் அவர்களின் எதிர்காலம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய ஒன்றரை வருடங்களாக மூடப்பட்ட பாடசாலைகளை உடனடியாக திறக்க அதிகாரிகளை வலியுறுத்துவதுடன் மற்றும் பல்கலைக் கழகங்கள் மற்றும் பொருத்தமான தடுப்பூசிகளை வழங்கி பாடசாலைகளை திறக்க அரசை வலியுறுத்துகின்றேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.