கொவிட்டால் இறந்தவர்களின் உடல்களை உடன் தகனம் செய்ய உதவுமாறு கோரிக்கை..!

கொவிட் தொற்று காரணமாக மரணித்தவர்களை இறுதி நேரத்தில் கூட பார்க்க முடியவில்லை. அவர்களின் தகனத்தையாவது உடனடியாக செய்து ஆத்ம சாந்திக் கிரியைகளை செய்வதற்கு உதவுமாறு மரணித்தவர்களின் உறவினர்கள் உருக்கமாக கோரியுள்ளனர்.


இது தொடர்பில் அவர்கள் தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக மரணித்த 20 வரையிலான சடலங்கள் இதுவரை தகனம் செய்யப்படாத நிலையில் வவுனியா பொது வைத்திய சாலையின் பிரேத அறையில் உள்ளன. இதில் சில சடலங்கள் பல நாட்களாக தகனம் செய்யப்படாத நிலையில் காணப்படுகின்றன.

இந்நிலையில், கொவிட் தொற்று காரணமாக மரணித்த தமது குடும்ப உறவுகளை குடும்பத்தினர் உட்பட உறவினர்கள் முழுமையாக பார்வையிட்டு அஞ்சலி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில் பல நாட்களாக இறந்தவரின் உடல்களை தகனம் செய்யாது, இறந்த பின் கூட உடலை நீண்ட நாள் வைத்து உருக்குலைக்காதீர்கள். இது அவர்கள் இறந்த பின் கூட நிம்மதியாக தகனம் செய்ய முடியவில்லையே என்ற வேதனையைத் தருகின்றது. இறந்த துயரைக் காட்டிலும் சடலத்தை வைத்து இழுத்தடிப்பதால் வரும் துயரத்தை தாக்க முடியவில்லை.

எனவே, உரிய அதிகாரிகள் இறந்தவர்களின் உடல்களை விரைவாக தகனம் செய்வதற்கு உதவ வேண்டும் என மரணமடைந்தவர்களின் உறவினர்கள் கோரியுள்ளனர்.


இதேவேளை இது தொடர்பில் கெளரவ தவிசாளரிடம் வினவிய போது,

எமது உறவுகளின் தற்போதய நிலையினை நாம் உணர்ந்துள்ளோம், இது உணர்வு பூர்வமான விடயம் என்பதையும் நாம் அறிவோம், நாம் மக்களுக்கானவர்கள். மக்களுக்காக சேவை செய்வதே எமது நோக்கம்.

அதேவேளை வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் உள்ள மின் மயானம் தொடர்ச்சியாக உடல்கள் எரிக்கப்பட்டமையால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக (கதவு) ஒரு சில நாட்களாக பழுதடைந்து காணப்பட்டது. அதனை மிக விரைவாக திருத்தம் செய்துள்ளோம். இதனால் சடலங்கள் தேக்கமடைந்து காணப்பட்டது,


எனினும் தற்போது மீண்டும் மயானம் திருத்தம் செய்யப்பட்டு இயங்குகின்ற போதும் நாள் ஒன்றுக்கு அதிக பட்சமாக 6 சடலங்களையே குறித்த மின் மாயானத்தில் தகனம் செய்ய கூடியதாக உள்ளது. இதனால் தாமதநிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் சடலங்களை எரிப்பதற்கான பெயர் விபரங்கள் கட்டணம் செலுத்தப்பட்ட அடிப்படையில் நகரசபை அலுவலர்களால் வழங்கப்பட்டுள்ளது அதன் அடிப்படையிலேயே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன எனத் தெரிவித்தார்.