வடக்கில் 20-30 வயதிற்கு உட்பட்ட அனைவருக்கும் செவ்வாய் முதல் சினோபாம் தடுப்பூசி..!

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் கோவிட்-19 தடுப்பூசி மருந்தேற்றல் திட்டத்தின் கீழ் 20 தொடக்கம் 30 வயதிற்கு உட்பட்ட அனைவருக்கும் செவ்வாய்(21) முதல் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் இன்று ஞாயிற்றுக் கிழமை(19.09.2021) செய்திக் குறிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த செய்திக் குறிப்பில்,

தடுப்பூசி வழங்கும் நிலையங்கள் பற்றிய விவரங்கள் அப் பிரதேசத்திற்குரிய சுகாதார மருத்துவ அதிகாரியினால் வெளியிடப்படும். அவ்வாறு அறிவிக்கப்படும் தடுப்பூசி வழங்கும் நிலையங்களில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான முதலாவது, இரண்டாவது தடவைக்கான தடுப்பூசிகளும் வழங்கப்படும்.

20 தொடக்கம் 30 வயதிற்கு உள்பட்டவர்கள் அனைவரும் தமது அடையாள அட்டை போன்ற உறுதிப்படுத்தும் ஆவணங்களைச் சமர்ப்பித்து தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளலாம்.


யாழ் மாவட்டத்தில் தடுப்பூசி அல்லது வேறு மருந்துகளிற்கு ஒவ்வாமை உடையவர்களுக்குத் தடுப்பூசி வழங்குவதற்கு யாழ் போதனா வைத்திய சாலையிலும், தெல்லிப்பழை, பருத்தித்துறை, சாவகச்சேரி மற்றும் ஊர்காவற்றுறை ஆதார வைத்திய சாலைகளிலும் செப்டெம்பர் மாதம்- 25 ஆம் திகதி மற்றும் ஒக்டோபர் மாதம்- 2 ஆம் திகதி சனிக் கிழமைகளில் காலை-08 மணி முதல் வழங்குவதற்கு மாற்று ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.


அவ்வாறான நிலைமைகள் இருப்பதாகச் சந்தேகிக்கப்பட்டு தடுப்பூசி வழங்கப்படாது திருப்பி அனுப்பப்பட்டவர்கள் தமது பிரதேசத்திற்குரிய சுகாதார வைத்திய அதிகாரியின் பரிந்துரைக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு மேற்குறிப்பிட்ட மருத்துவ மனைகளில் ஏதாவது ஒன்றில் தமக்குரிய தடுப்பூசியினை பாதுகாப்பாக பெற்றுக் கொள்ள முடியும் என அச் செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(இங்கு சினோபாம் ஊசியே வழங்கப்படவுள்ளது)