நிகழ்நிலையில் யாழ்.பல்கலைப் பட்டமளிப்பு; நிராகரிக்கும் மாணவர் ஒன்றியம்..!

நிகழ்நிலையில் நடைபெறவுள்ள யாழ் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பை முழுமையாக நிராகரிக்கின்றோம் எனவும், நாடு வழமைக்குத் திரும்பிய பின்னர் நேரடியாகப் பட்டமளிப்பு விழாவை நடத்துவதற்கே மாணவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பில் இன்று திங்கட் கிழமை(20) யாழ்ப்பாணப் பல்கலை மாணவர் ஒன்றியத்தினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் 35 ஆவது பட்டமளிப்பு விழா பகுதி இரண்டானது செப்டம்பர்- 16,17,18 ஆம் திகதிகளில் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் தற்போதைய கொரோனா ஊரடங்கு காரணமாக ஒக்டோபர் 7,8,9 ஆம் திகதிகளில் நடாத்துவதாக பிற்போடப்பட்டது.

எனினும், அந்த திகதிகளில் மாணவர்களை நேரில் அழைத்துப் பட்டமளிப்பை நடாத்துவதற்குச் சுகாதார அமைச்சினால் அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் அதனை ஒக்டோபர்-07 ஆம் திகதி நிகழ் நிலையில் நடாத்துவதற்குப் பல்கலைக்கழக நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.


எனினும்,இத் தீர்மானம் தொடர்பாக மாணவர்கள் மத்தியில் விருப்பமின்மை காணப்படுகின்றது. இது தொடர்பாக நாம் 15.9.2021 அன்று துணை வேந்தருக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தோம். எனினும், துணை வேந்தரிடமிருந்து சாதகமான பதில் எமக்கு கிடைக்கவில்லை.

எனவே,நாடு முழுவதும் வழமைக்கு திரும்பிய பின்னர் நேரடியாகப் பட்டமளிப்பு விழாவை நடத்துவதற்கே மாணவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.


எனவே, பட்டமளிப்பு விழாவை நிகழ்நிலையில் நடத்தாமல் நேரடியாக மாணவர்களை அழைத்து பட்டமளிப்பு விழாவை நடாத்துவதற்கு யாழ் பல்கலைக் கழக நிர்வாகத்தைக் கோருகின்றோம் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.