கிராம சேவகர்களுக்கும் மேலதிக கொடுப்பனவுகளை வழங்க முன்வர வேண்டும்- சாணக்கியன்

சுகாதார பரிசோதர்களுக்கு வழங்கப்படுவது போன்று கிராம சேவகர்களுக்கும் மேலதிக கொடுப்பனவுகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.


நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

இலங்கையில் 10,000இற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

உண்மையிலேயே இன்று இந்த கொரோனா சூழல்நிலையினை எடுத்துக் கொண்டால், இலங்கையில் வடக்கு, கிழக்கு என்ற மாகாணங்களிலேயே உண்மையில் கொரோனா தொற்று நோயாளர்களுடைய எண்ணிக்கையும், மரணங்களுடைய எண்ணிக்கையும் மிகவும் குறைவாக உள்ளது.


அந்த வகையில் குறித்த மாகாணங்களில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் சுகாதாரத் துறையினரை சேர்ந்த அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதேபோன்று உண்மையிலேயே பேசப்படாத ஒரு பிரிவினராக காணப்படும் கிராமசேவகர்கள் பற்றியும் நாங்கள் பேசவேண்டும். அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.


அத்துடன், சுகாதார பரிசோதர்களுக்கு வழங்கப்படுவது போன்று கிராம சேவகர்களுக்கும் மேலதிக கொடுப்பனவுகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எமது நாட்டில்  500 உள்ள கிராம சேவகர்கள் கொரோனா தொற்றுக்குள்ளான அதேசமயம் அதில் 52 பேர் இறந்துள்ளனர். இவர்களுக்கான விசேட கொடுப்பனவு அரசாங்கத்தினால் கட்டாயம் வழங்கப்பட வேண்டும்.  என நான் வலியுறுத்த விரும்புகின்றேன் எனத் தெரிவித்தார்.

இதேவேளை கொரோனா உட்பட சகல இடர்கள், அனர்த்தங்களின் போதும் களத்தில் உயிரை துச்சமென மதித்து 24 மணித்தியாலமும் தயார் நிலையில் செயற்படும் கிராம சேவகர்களின் ஊதியம் மற்றும் கொடுப்பனவுகள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.