எமது போராட்டத்தை முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்து முடக்க முடியாது – ஜோசப் ஸ்டாலின்

அதிபர்-ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கான போராட்டத்தை தொடர்ந்தும் முன் கொண்டு செல்வோம். கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேராவைப் போன்று முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்து எமது போராட்டத்தை யாராலும் முடக்க முடியாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். கொழும்பில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்


அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. அழகியல் துறை மாணவர்களுக்கான சாதாரண தர செயன்முறை பரீட்சையை நடத்த வேண்டியுள்ளது. இவ்வாறான நிலையில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்த தீர்மானத்தை எடுக்கும் போது அதிபர் ஆசிரியர்களுக்கே முன்னுரிமையளிக்கப் பட்டிருக்க வேண்டும்.


ஆனால் அவர்களின் பிரச்சினைக்கு தீர்வினை வழங்காது , அவர்களை புறக்கணித்து அரசாங்கம் அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுக்குமாயின் இறுதி தீர்வினைக் காண முடியாது.


எனவே அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் கல்வி அமைச்சு, அரசாங்கம் முரண்பட்ட பேச்சுவார்த்தைகளை நிறுத்தி சரியான தீர்வினை எட்ட வேண்டும் என்பதே எமது வலியுறுத்தலாகும் என்றார்.