கத்தோலிக்க தேவாலயங்களை இலக்கு வைத்து பயங்கரவாத தாக்குதல்; வெளியாகிய அறிவிப்பு

கிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து மீண்டுமொரு முறை ஏதேனும் வகையில் தாக்குதல் நடத்தப்படும் என்ற தகவல் கிடைத்துள்ளதாக இலங்கை கடற்படையினர் சிலர் வத்தளை- போப்பிட்டிய ஆலயத்தில் சேவையாற்றும் ஊழியருக்கு தெரிவித்துவிட்டுச் சென்றதாக கொழும்பு மறை மாவட்டத்தின் சமூக மற்றும் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர்அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த தெரிவித்தார்.


நேற்று காலை போப்பிட்டியவிலுள்ள தேவாலயத்துக்கு இலங்கை கடற் படையினர் வந்துள்ளனர். அங்கே வந்து அங்கு ஆலயத்தில் வேலை பார்க்கும் ஊழியரிடம், இந்த ஆலயத்துக்கு தாக்குதல் நடத்தப்படும் என்றும், அருகே உள்ள ஏனைய ஆலயங்களுக்கும் தாக்குதல் நடத்தக் கூடும் என்று தெரிவித்துள்ளனர்.


மேலும், தேவாலயத்துக்கு வருகை தருபவர்கள் குறித்து அவதானமாக இருக்கும் படியும், அருட் தந்தையர்கள் அணியும் அதற்கு ஒத்த உடைகளை அணிந்து வருபவர்கள் குறித்து அவதானமாக இருக்கும் படியும், இந்த தகவலை அருகே உள்ள ஏனைய ஆலயங்களுக்கும் தெரிவிக்குமாறும் அவரிடம் இலங்கை கடற்படையினர் தெரிவித்து விட்டுச் சென்றுள்ளனர்.


இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவிக்கையில்,

தேவாலயங்கள் மீது பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என பரவி வரும் செய்திகள் பகுப்பாய்விற்கு உட்பட்டதோ, உறுதிப்படுத்தப்பட்டதோ அல்ல. அடிப்படையற்ற தகவல்கள் குறித்து மக்கள் அச்சமடையத் தேவையில்லை என தெரிவித்துள்ளார்..