மன்னார் பிரதேச சபையின் புதிய தலைவரின் பெயரை வர்த்தமானியில் வெளியிட இடைக்கால தடை..!

வெற்றிடம் நிலவும் மன்னார் பிரதேச சபையின் தலைவர் பதவிக்கு புதிய தலைவர் ஒருவரை பெயரிட்டு, எதிர்வரும் ஒக்டோபர் 27 ஆம் திகதி வரை எந்த வர்த்தமானி அறிவித்தலையும் வெளியிட கூடாது என மேன் முறையீட்டு நீதிமன்றம் வட மாகாண சபையின் மாகாண ஆளுநருக்கு இன்று கட்டளைப் பிறப்பித்தது.

மன்னார் பிரதேச சபையின் தலைவர் மற்றும் சபை அங்கத்துவ பதவியிலிருந்து தன்னை நீக்கிய வடக்கு ஆளுநரின் தீர்மானத்துக்கு எதிராக ஷாகுல் ஹமீத் மொஹமட் முஜாஹிர் மேன் முறையீட்டு நீதிமன்றில் கட்டளை நீதிப் பேரணை (Writ of Mandamus) மனுவொன்றினை தாக்கல் செய்துள்ள நிலையில், அதனை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டே மேன் முறையீட்டு நீதிமன்றம் இந்த இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்தது.


மேன் முறையீட்டு நீதிமன்றின் சோபித்த ராஜகருணா, தம்மிக கனேபொல ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாமே இதற்கான உத்தரவை பிறப்பித்தது.

இந்த உத்தரவானது எதிர்வரும் 27 ஆம் திகதி வரை செல்லுபடியாகும் என அறிவித்த நீதிமன்றம், அன்றையதினம் மனுவின் பிரதிவாதிகளை மன்றில் ஆஜராக அறிவித்தல் அனுப்புமாறு மனுதாரர் தரப்புக்கு நீதிமன்றம் ஆலோசனை வழங்கியது.

இன்றைய தினம் மனு பரிசீலிக்கப்பட்ட போது மனுதாரரான ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் (அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி) மன்னார் பிரதேச சபை தலைவராக தெரிவு செய்யப்பட்ட, தற்போது பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள ஷாகுல் ஹமீத் மொஹமட் முஜாஹிர் சார்பில் சட்டத்தரணிகளான ருஷ்தி ஹபீப், ருஷ்னி உள்ளிட்டவர்களுடன் சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். சஹீட் ஆஜரானார்.


எவையேனும் தகுதியின்மைகள் உள்ளனவா என்பது பற்றி விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரின் கீழ் தனது சேவை பெறுனருக்கு எதிராக தனி நபர் விசாரணைக் குழுவினால் விசாரணை நடாத்தப்பட்டதாகவும், அதில் வாதித்தரப்பின் சாட்சியங்களைக் கவனத்தில் கொண்டதன் பின்பு தனி நபர் விசாரணைக் குழுவின் அவதானிப்புக்கள் மற்றும் தீர்ப்புக்களுடன் ஆளுநரிடம் கையளிக்கப் பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையிலேயே தனது சேவை பெறுநர் பதவி நீக்கம் செய்யப் பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம். சஹீட் சுட்டிக் காட்டினார்.

இதன் போது தன் பக்க நியாயத்தை தனது சட்டத்தரணி ஒருவர் ஊடாக முன்வைக்க தனது சேவை பெறுநருக்கு போதுமான சந்தர்ப்பத்தை அவ்விசாரணைக் குழு அளிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக் காட்டினார். இது இயற்கை நீதிக் கோட்பாட்டை மீறும் செயல் என அவர் நீதிமன்றுக்கு குறிப்பிட்டார்.

அத்துடன் இவ்வாறான பின்னணியில், அவசர அவசரமாக இன்று புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

இதன்போது பிரதிவாதிகளுக்காக சட்ட மா அதிபரை பிரதிநிதித்துவம் செய்து மன்றில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டவாதி மனோஹர ஜயசிங்க, மனுதாரரை பதவி நீக்கம் செய்த முறைமை சரியானதே என வாதிட்டார்.


அத்துடன் தனக்கு தனது சேவை பெறுநர்களாகிய பிரதிவாதிகளிடம் மேலதிக ஆலோசனைப் பெற்றுக் கொள்ள கால அவகாசம் வேண்டும் என அவர் கோரினார்.

இதனையடுத்து, விடயங்களை ஆராய்ந்த நீதிபதிகள் குழாம், வழக்கு பரிசீலனைகளிடையே புதிய பிரதேச சபை தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் நடந்துள்ள நிலையில், அது தொடர்பில் தடை உத்தரவை பிறப்பிப்பது சாத்தியமற்றது என்பதால், வெற்றிடம் நிலவும் மன்னார் பிரதேச சபையின் தலைவர் பதவிக்கு புதிய தலைவர் ஒருவரை பெயரிட்டு, எதிர்வரும் ஒக்டோபர் 27 ஆம் திகதிவரை எந்த வர்த்தமானி அறிவித்தலையும் வெளியிடக் கூடாது என மாகாண ஆணையாளருக்கு தடை உத்தரவு பிறப்பித்தது.

சாகுல் கமீது முஹம்மது முஜாஹிர் எனும் மனுதாரராகிய தன்னை மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் என்ற வகையில் அப் பதவியில் பணிகள், கடமைகளை நிறைவேற்றும் போது 1987 ஆண் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் உப பிரிவு 185 (1)(இ),(அ) ஆகிய பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களை புரிந்தார் என்பதற்கு போதுமான சாட்சியங்கள் உள்ளன என திருப்தியடைவதாக கூறி, பதவி நீக்கம் செய்யப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வட மாகாண ஆளுநரால் பிறப்பிக்கப் பட்டுள்ளதாகவும் அதனை மாற்றும் கட்டளை நீதிப் பேராணை ஒன்றினை பிறப்பிக்குமாரும் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


மனுவில், வட மாகாண ஆளுநர் பியன்சியா சறோஜினிதேவி மன்மதராஜா சார்ள்ஸ், ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி கந்தையா அரியநாயகம், வட மாகாண ஆணையாளர் , சட்ட மா அதிபர் உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.