குறுக்கு வழியில் அதிபர்-ஆசிரியர்கள் மீது அடக்கு முறையை கையாளும் சரத் வீரசேகர..!

நாட்டில் ஜனநாயக ரீதியில் ஆர்ப்பாட்டம் நடத்த முழு சுதந்திரமும் வழங்கப் பட்டுள்ளதாக பகிரங்க மேடைகளில் தெரிவிக்கும் அரசு ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை மறைமுகமாக விசாரணைக்கு அழைத்திருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதிபர் – ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு கேட்டு கொழும்பில் போராட்டம் நடத்திய பலரை ஸ்ரீலங்கா காவல் துறையினர் நாளை மறுதினம் விசாரணைக்கு அழைத்திருப்பதாக கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் (Joseph Stalin) தெரிவித்தார்.


“அதிபர் – ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு கேட்டு கடந்த ஓகஸ்ட் மாதம் 04 ஆம் திகதி கொழும்பில் பாரிய வாகனத் தொடரணி ஒன்றை முன்னெடுத்திருந்தோம். அதன்போது இலங்கை காவல் துறையினரால் 44 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். அதன் பின் அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்கள்.

இந்த பேரணியில் தங்களது சொந்த வாகனங்களையே ஆசிரியர்களும் அதிபர்களும் பயன்படுத்தி இருக்கின்ற நிலையில், வாகனங்களின் உரிமையாளர்களுக்கு காவல் துறையின் கொழும்பு கோட்டையிலுள்ள நிலையத்தினால் விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயக விரோத செயற்பாடாகும்.


ஆர்ப்பாட்டம் செய்ய முழு சுதந்திரமும் இருப்பதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் கூறி வருகிறது. மறு பக்கத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிபர்கள், ஆசிரியர்கள் மீது விசாரணை என்ற பெயரில் குறுக்கு வழியில் அடக்கு முறையை கையாள முயற்சிக்கின்றார்.

இந்த செயற்பாட்டிற்கு எதிராக எழும்படி மனித உரிமை அமைப்புக்கள் என பலரிடமும் கேட்கின்றோம். அதேபோல அடுத்த மாதம் 15ஆம் திகதி தென்மாகாண பாடசாலைகளை திறப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும் அதற்கு முன்னர் ஆசிரியர்கள், அதிபரிகளின் சம்பளப் பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வை அறிவிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.