வடக்கு மாகாண கிராமப் புற மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறு தொடர்பில் ஆளுநர் மகிழ்ச்சி..!

அண்மையில் வெளியான சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளில், வடமாகாண கிராமப்புற பாடசாலை மாணவர்கள் பெறுபெறுகள் மகிழ்ச்சியைத் தருவதாக வட மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் கூறியுள்ளார். மெய்நிகர் வழியில் ஊடகங்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.


இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொரோனா சூழ்நிலையின் மத்தியில் சாதாரண தர பரீட்சயை எதிர் கொண்ட வடக்கு மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொண்டுள்ளனர். அதிலும் குறிப்பாக வடமாகாணத்தின் கிராமப்புற மாணவர்கள் பல்வேறு நெருக்கடிகளின் மத்தியில் சிறந்த பெறுபேறுகளை பெற்றமை பாராட்டத்தக்கது.

இதேவேளை கடந்தகால தரவுகளுடன் ஒப்பிடுகையில் வெளியான க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சராசரியாக 70வீத சித்தியை வடமாகாணம் பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.


இந்நிலையில் கொரோனா காரணமாக பாடசாலைகள் இயங்காத நிலையிலும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக திட்டங்களை வகுத்து செயல்படுத்திய கல்விப் புலத்தினருக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் குறிப்பிட்டார்.

இதன் போது ஊடகவியலாளர் ஒருவரால் வடக்கு மாகாண பாடசாலைகளில் ஆசிரிய வளப்பங்கீடு உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பில் எழுப்பபட்ட கேள்விக்குப் பதிலளித்த ஆளுநர்,


குறித்த விடயம் தொடர்பில் கடந்த காலங்களில் பிரச்சனைகள் இருந்ததை நான் நன்கு அறிவேன். ஆகவே ஆசிரியர்கள் இடமாற்றம் தொடர்பில் முறையான செயற்பாடுகளை முன்னெடுத்து பாடசாலைகள் ஆரம்பித்ததும் அதனை நடைமுறைப் படுத்துவதற்கு தயாராக இருக்கிறேன் என தெரிவித்தார்.