நாட்டில் இரண்டு சட்டம்; சாரதி அனுமதிப் பத்திரத்தை பரிசோதித்த பொலிஸ் அதிகாரி இடமாற்றம்..!

தனது சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்று பரிசீலித்த பொலிஸ் உத்தியோகத்தரை, பாதுகாப்பு அமைச்சின் 2 ஆம் செயலர் என கூறும் ஒருவர் ஏசிப் பேசும் வீடியோவொன்று சமூக வலைத் தளங்களில் பரவி வருகிறது.

இவ்வாறான நிலையில், குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை உடனடியாக இடமாற்றம் செய்ய தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த செயலாளர் மற்றும் அவரது மனைவி ஆகியோர், அதிவேக பாதையூடாக பயணிக்கும் போது, குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் அவர்களது விபரங்களைப் பெற முயற்சித்துள்ளார்.


இதன் போது பாதுகாப்பு அமைச்சின் செயலர்களில் ஒருவர் என கூறிக் கொள்ளும் குறித்த அதிகாரி, தனது கையடக்கத் தொலைபேசியில் வேறு அதிகாரிகளுக்கு அது தொடர்பில் அறிவிப்பதும், அவரும், அவர் மனைவியும் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை திட்டுவதும் அந்த காணொளியில் பதிவாகியுள்ளது.

இதன்போது குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தனது வழமையான கடமைகளை செய்வதும், செயலர் என கூறிக்கொள்ளும் குறித்த சாரதியை அறிவுறுத்துவதும் அந்த காணொளியில் பதிவாகியுள்ளது.

மத்தறை – அபரெக்க அதிவேக பாதை நுழைவாயில் ஊடாக அத்துருகிரிய வரை பயணிக்கும் நோக்கில் கெப் வண்டியில் பயணித்துள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலர்களில் ஒருவர் எனக் கூறிக் கொள்ளும் நபரின் சாரதி அனுமதிப் பத்திரத்தை பொலிஸ் உத்தியோகத்தர் கோரி பரீட்சித்தமையே சம்பவத்தின் பின்னணியில் உள்ள காரணியாகும்.


எவ்வாறாயினும் சாரதி அனுமதிப் பத்திரத்தை பரீசித்தமையை அடுத்து, அமைச்சின் செயலர் எனக் கூறிக்கொள்ளும் குறித்த நபர் பொலிஸ் உயரதிகாரிகளுக்கு அது தொடர்பில் அறிவிப்பதும் குறித்த காணொளியில் பதிவாகியுள்ளது.

இவ்வாறான பின்னணியிலேயே, தனது கடமைகளை செய்த 40938 எனும் இலக்கத்தை உடைய ருவன் எனும் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர், பொலிஸ் திணைக்களத்தின் மனித வளப் முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சிசிர குமாரவின் கையெழுத்துடன் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலுக்கு அமைய இடமாற்றப்பட்டுள்ளார்.

அதிவேக பாதை பொலிஸ் பிரிவிலிருந்து மாத்தறை பிரிவுக்கு சேவை அவசியம் கருதி அவர் இவ்வாறு இடமாற்றப்படுவதாக அந்த இடமாற்ற அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரால் ஜகத் அல்விஸிடம் கேட்ட போது, குறித்த இடமாற்றம் தொடர்பாக உரிய விசாரணை ஒன்றினை முன்னெடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியதாக தெரிவித்தார்.

அத்துடன் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் தலையீட்டுடன், குறித்த இடமாற்றத்தை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த அமைச்சின் தகவல்கள் தெரிவித்தன.

இதேவேளை நாட்டில் பொது மக்களுக்கு ஒரு சட்டமும் ஆளும் கட்சியின் அரசியல்வாதிகள் மற்றும் ஆதரவாளர்களுக்கு ஒரு சட்டமும் நடைமுறையில் உள்ளது என்பது வெளிப்படையாக தெரிகின்றது.