பட்டதாரி பயிலுனர்கள் மற்றும் அதிபர்-ஆசிரியர்கள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – சுசில்

பயிலுனர் பட்டதாரிகள் 53 ஆயிரம் பேருக்கும் மூன்று மாதங்களில் நிரந்தர நியமனம் வழங்க அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது.

அத்துடன் அதிபர் ஆசிரியர் தொழிற் சங்கங்கள் இணக்கம் தெரிவித்தால் ஆசிரியர் சேவையை மூடிய சேவையாக அமைக்க முடியும் என கல்வி இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது, அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடு, பயிலுனர் பட்டதாரிகளுக்கான நிரந்தர நியமனம் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர் ரோஹினி குமாரியினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.


அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாட்டை வரவு – செலவு திட்டத்துக்கு பின்னர் தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது.

அதுவரைக்கும் ஆசிரியர்களுக்கு மேலதிக கொடுப்பனவாக 5ஆயிரம் ரூபா மாதாந்தம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டு தற்போது அது வழங்கப்பட்டு வருகின்றது.

அதேபோன்று ஆசிரியர்களின் கோரிக்கையான ஆசிரியர் சேவையை மூடிய சேவையாக மாற்றியமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாகவும் ஆராய்ந்து வருகின்றோம்.


ஆசிரியர் சேவையை மூடிய சேவையாக மாற்றியமைப்பதாக இருந்தால் அதிபர், ஆசிரியர் தொழிற் சங்கங்கள் அனைத்தும் அதற்கு இணக்கம் தெரிவிக்க வேண்டும். ஒருசில அதிபர் சங்கங்கள் இதற்கு இணக்கம் தெரிவிப்பதில்லை.

அவ்வாறு இணக்கம் தெரிவித்தால் அது தொடர்பில் அமைச்சரவைக்கு பத்திரம் சமர்ப்பிக்கலாம். தற்போது இது தொடர்பாக தொழிற் சங்கங்களுடன் கலந்துரையாடி வருகின்றோம்.

அத்துடன் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கு அமைச்சரவை உபகுழு கலந்துரையாடி வருகின்றது. கலந்துரையாடல்களில் மேற்கொள்ளப்படும் தீர்மானத்துக்கமையவே சுற்று நிருபம் ஒன்றின் மூலம் சம்பள பிரச்சினையை தீர்க்க முடியுமான விடயங்களை அறிவிக்க முடியும்.


மேலும் அரச சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்டிருக்கும் பயிலுனர் பட்டதாரிகளில் 18 ஆயிரம் பேர் அரச பாடசாலைகளுக்கு இணைக்கப் பட்டிருக்கின்றனர்.

இந்த 18 ஆயிரம் பேரும் ஆசிரியர் சேவைக்கு விருப்பம் தெரிவிப்பவர்கள் அல்ல. ஆனால் ஆசிரியர் சேவைக்கு விருப்பமானவர்கள் வேறு அரச சேவைகளுக்கும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அத்துடன் அரச சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கும் 53ஆயிரம் பயிலுனர் பட்டதாரிகளுக்கும் 3 மாதங்களில் நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்திருக்கின்றது. அதுதொடர்பில் அமைச்சரவை உபகுழு கலந்துரையாடி வருகின்றது.


பயிலுனர் பட்டதாரிகளில் ஆசிரியர் சேவைக்கு விருப்பம் உள்ளவர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வது தொடர்பில் கலந்துரையாடி வருகின்றோம். அந்தத் தீர்மானம் கிடைத்த பின்னர் அவர்களை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்ள முடியும் என்றார்.