24 வருடங்களாக எமது உழைப்பினை சுரண்டியது போதும்; எமது பிரச்சினைகளை உடன் தீர்த்துவை..!

சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கான தீர்வை வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அதற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவிலும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா வடக்கு வலயம் சார்பாக காலை 9 மணிக்கு மருக்காரம்பளையில் அமைந்துள்ள கோட்டக் கல்வி அலுவலகத்திற்கு முன்பாகவும், 10 மணியளிவில் வவுனியா தெற்கு வலயத்தின் முன்பாகவும் ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.


இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

நீண்ட நாட்களாக நிலவி வரும் அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வை வழங்குமாறு வலியுறுத்தி எம்மால் ஆரம்பிக்கப்பட்ட பணிப் புறக்கணிப்பு போராட்டம் 87 நாட்களாக தொடர்கிறது. எனினும் அரசாங்கம் இது வரையிலும் எமக்கான நிரந்தர தீர்வினை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை.


எனவே 24 வருடங்களாக எமது உழைப்பினை சுரண்டியது போதும் இனியாவது எமது பிரச்சனைகளை உடனடியாக தீர்ப்பதுடன் சுபோதினி அறிக்கையை உடன் நடைமுறைப் படுத்துமாறும் கோரிக்கை விடுத்தனர்.

ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட அதிபர், ஆசிரியர்கள் இலவச கல்விக்கு 6 வீதம் நிதி ஒதுக்கு, இலவசக் கல்வியை தனியார் மயப்படுத்தாதே, தொழில் கௌரவத்தை உதாசீனப்படுத்தாதே, ஐந்தாயிரம் ரூபாய்காக அடிபணிய மாட்டோம், போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.


ஆர்பாட்டத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம், ஆசிரியர் சேவை சங்கம், இஸ்லாமிய ஆசிரிய சங்கம் மற்றும் அதிபர்கள் சங்க பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.