மாறி வரும் உலகுக்கு ஏற்ற வகையில் ஆசிரியர்கள் தம்மைப் புதுப்பிக்க வேண்டும் -M. W. M. ஷாஜாத்

கல்வியினை எவ்வாறு எம்மால் இலகுவாகப் பெற முடியும் என்பதனைச் சுட்டிக் காட்ட ஒரு சிறந்த வழிகாட்டி அவசியமாகும். இவ்வாறான வழிகாட்டி வாண்மைமிக்க ஆசிரியர் ஆவார். வாண்மை என்பது ஒரு குறித்த துறை தொடர்பான சிறப்பான அறிவும், சுதந்திர மாக செயற்படும் திறனும், எதனையும் தயங்காமல் பொறுப்பேற்கும் ஆற்றலுமாகும். எனவே, இம்மூன்று அம்சங்களும் எந்த ஆசியரிடம் நிறைந்து காணப்படுகின்றதோ அவரே வாண்மைமிக்க ஆசிரியராவார்.

வாண்மையாளர்கள் தாம் மேற்கொள்ளும் தொழில் துறையில் சிறப்பான ஆற்றலும் நிறைவான தேர்ச்சியினையும் பெற்றிருப்பது அவசியமாகும். ஒரு சாதாரண மனிதனின் இயலுமைக்கு அப்பாற்பட்டவைகளே வாண்மைத் துறைகளாகும்.

எனவே, வாண்மையாளர்கள் சாதாரணமானவர்களாக அல்லாமல் “நீண்ட காலப் பயிற்சிகளோடு சிறப்புத் துறையில் சேவையாற்றுவதோடு ஆய்வு அடிப்படையிலான அறிவுத் தொகுதிகளை விளங்கிக் கற்பதற்கான வாய்ப்பும் கற்றுக் கொண்ட அறிவை பொருத்தமான சந்தர்ப்பத்தில் பயன்படுத்தும் திறனையும் பெற்றிருக்க வேண்டும்.


கல்வியானது தனியாள் விருத்திக்கும் சமூக விருத்திக்கும் அடிப்படைக் காரணியாக அமைவதால் அது தொடர்பாக தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இங்கு தனியாள் ஒவ்வொருவரும் வாழ்நாள் முழுவதும் கற்பதும் அவ்வாறு கற்ற அறிவினை வாழ்க்கையினதும் சமூகத்தினதும் முன்னேற்றத்திற்கு பயன்படுத்தல் வேண்டும். இச்செயற்பாட்டிற்கு ஆணிவேராகத் திகழ்பவர்கள் ஆசிரியர்களாவர்.

சிக்கலான இப்பணியினை நிறைவு செய்வதற்கு ஆசிரியர்களிடம் வாண்மை தொடர்பான உயர் நிலைத் தேர்ச்சி தேவைப்படுகின்றது. எனவே, ஆசிரியர்கள் இப்பணியினை செய்பவர்ளக்குரிய தேர்ச்சியைப் பெறும் போது ஆசிரியர்களால் தம்மிடம் கற்க வரும் இளம் தலைமுறையினரை உரியவாறு தயார் செய்ய முடியும் எதிர் காலத்தில் எழுகின்ற சவால்களை துணிச்சலோடு எதிர் கொள்ளவும் அவர் களின் கற்றலை இலகுள்ள தாக்குவதற்கும் அவர்களின் கற்றலுக்கு அவர்களையே பொறுப்புடையவர்களாக்கும் பணியும் ஆசிரியரின் வாண்மை விருத்திலேயே தங்கியுள்ளது.

ஆசிரியர்கள் மாணவர்களின் கற்றல் தொடர்பான மனப்பாங்குகளை விருத்தியடையச் செய்யும் முகவர்களாவர். இவர்களே மாணவர் மத்தியில் நேரானதும் எதிரானதுமான மனப்பாங்குகளையும் ஏற்படுத்த முடியும். ஆசிரியர்கள் மாணவர் களிடையே கற்றல் தொடர்பான ஆர்வத்தை யும், சுதந்திர உணர்வையும் உயர் சிந் தனை ஆற்றலையும் விருத்தி செய்ய முடியும். இங்கு முறைசார் கல்வியினை பிரயோகிப்பவர்கள் ஆசிரியர்களாவர். எனவே, முன் குறிப்பிட்ட தேர்ச்சிகளை மாணவர் மத்தியில் உருவாக்க ஆசிரியர் வாண்மையில் உரிய பங்கு கொடுக்கப்பட வேண்டும்.


மாறும் உலகில் பணியாற்றும் ஆசிரியர்கள் சர்வதேச வர்த்தமானங்களுக்கு உரியவாறு தமது வாண்மையை விருத்தி செய்வது முக்கியமானதாகும். எனவேதான் இன்றைய கல்வியில் தொடருறு கல்விக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் தாம் பெற்ற கடந்த கால அனுப வங்களை வைத்துக் கொண்டு தற்கால கல்வித் தேவைக்கு ஈடுகொடுக்க முடியாது. ஏனெனில் மாறிவருகின்ற நவீன உலகிற்கு தக்க வகையில் தம்மைப் புதுமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு விளங்கும் வாண்மைமிக்க ஆசிரியர்கள் சில பண்புகளை தன்னகத்தே கொண்டிருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அவற்றுள் சில

* நேர்த்தியான உடை நடையும் மனவெழுச்சி உறுதிப்பாடு அதிகமுள்ளவரும்

* எப்போதும் கரிசணையுடனும் சுறுசுறுப்புடனும் செயற்படும் ஆற்றல்.

* தமது பாடத்தினை மட்டும் கற்பிக்க போதுமான அறிவு இல்லாமல் பரந்த அறிவு கொண்டவர்.

* சுய ஒழுக்கக் கட்டுப்பாடும் மாணவரது ஒழுக்கத்தைப் பேணுவதில் அதிக ஆர்வம் காட்டுபவரும்.

* கற்றல் கற்பித்தல் செயன்முறையின் தர மேம்பாட்டிற்காக புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துபவர்.

* ஆக்கத்திறன் மிக்கவரும் தமது பணியினை கடமை தவறாமல் செய்பவரும்.

* தமது கருத்திற்குள் மாத்திரம் நிற்காமல் நெகிழ்ச்சியாக சகல கருத்துக்களையும் வரவேற்கக் கூடியவர்.

* நேர முகாமைத்துவமும் மத சிந்தனையும் உடையவர்.

* பிரச்சினைகள் இடர்பாடுகளின் போது பொறுமையாகச் செயற்படுபவர்.

* சாதாரணமானவர்கள் போல் அல்லாமல் பரந்த நோக்குடையவர்.

* மாணவர் மையக் கற்றல், கற்பித்தல் உத்திகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு மாணவரையும் குறைந்த பட்ச அடைவுக்கேனும் இட்டுச் செல்ல முற்படுபவர்.


காலத்துக்குக் காலம் கல்வியில் முன்னேற்றத்தைக் கொண்டு வருவதற்காக கல்வியானது மறுசீரமைக்கப்பட்டு வருகின்றது. இவ்வகை மறு சீரமைப்புக்களால் மக்கள் பெரும் அடைவுகளை எதிர்பார்க்கின்றனர். பாடசாலையும் ஆசிரியர்களும் தரம் நோக்கிய வகையில் ஏற்படும் முன் னேற்றம் தொடர்பாக செயற்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கல்வி அமைப்பில் ஈடுபடும் உயர் நிலை அதிகாரிகளான திட்டமிடல் அதிகாரிகள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியியலாளர்கள் போன்றோரின் கருத்துப்படி ‘பயனுறுதியுள்ள மாணவர் கற்றல், கலைத்திட்ட அமுலாக்கல் பாடசாலை தொடர்பான முழுமையான முன்னேற்றம் ஆகியவை தொடர்பாக ஆசிரியர்களே முக்கிய பங்காற்ற வேண்டும் என நம்பப்படுகிறது.

இலங்கையில் காலத்துக்குக் காலம் நடைமுறைப்படுத்தப்படும் கல்வி மறுசீரமைப்பில் ஆசிரிய வாண்மை விருத்தி தொடர்பாக அதிக அளவு அக்கறை காட்டப் படுகின்றது. இலங்கையில் இன்று நடைமுறைப்படுத்தப்படும் புதிய கல்வி மறுசீரமைப்பிலும் கூட ஆசிரியர் தொழில் சார் விருத்திக்கான பல்வேறு விதப்புரைகள் முன்மொழியப்பட்டுள்ளன. ஆசிரிய வாண்மை விருத்தியை இரண்டு பெரும் பகுதிகளாகப் பிரிப்பது பொருத்தமானது.


ஆசிரியர் தொழிலில் ஈடுபடுவதற்கு முன்னர் வழங்கப்படும் பயிற்சி, ஆசிரியர் முன்சேவைப் பயிற்சி அல்லது தொடக்க நிலைப் பயிற்சி எனப்படும். ஆசிரியர் தொழிலில் இருக்கும் போது வழங்கப்படும் தொழில் வாண்மைப் பயிற்சி தொடருறு ஆசிரியர் பயிற்சி அல்லது சேவைக்காலப் பயிற்சி எனப்படும்.

இவ்விரு வகைப் பயிற்சிகளையும் வழங்குவதன் மூலம் எதிர் பார்க்கப்படுவது ஆசிரிய வாண்மை விருத்தியாகும். இவ்வாறு பயிற்சி பெறம் ஆசிரியர்கள் மேற் குறிப்பிட்ட பண்புகளையும் கொண்டிருக்கும் போது அவர்களையே வாண்மை விருத்தியுள்ள ஆசிரியர்கள் என வர்ணிக்கலாம்.

வாண்மைமிக்க ஆசிரியரின் வகுப்பறை

மாணவர்கள் வீட்டில் கற்கும் போது தனியாகவே கற்கின்றனர். ஆனால் பாட சாலை வகுப்பறையில் குழுவாக மற்ற மாணவர்களுடன் கலந்துரையாடி கற்றலில் ஈடுபடுகின்றனர். எனவே, இந்த இரு செயற்பாடிற்குமிடையே முக்கிய வேறு பாடுகள் காணப்படுகின்றன. வகுப்பறை எனும் போது மாணவர்களைக் கொண்ட குழுக்களையே நாம் கருதுகின்றோம். குழு என்பது கூட்டுப் போல் எமக்குத் தோன்றினாலும் அதற்கப்பால் ஒரு குழுவின் அம்சங்கள் தனி நபரில் பெரிதும் செல்வாக்குச் செலுத்துகின்றன.

வருடத்தின் முதல் நாள் பாடசாலை ஆரம்பிக்கும் போதும், புதிய கற்றல் செயன் முறைகளை வகுப்பறையில் அறிமுகப்படுத்தும் போதும் முன்நிகழ்வுகள் பற்றி ஆசிரியர் அதிக அக்கறை செலுத்துவது அவசியமாகும். பாடசாலையில் காணப்படும் அதிகரித்த வேலைப்பழுவின் காரணமாக ஆசிரியர்கள் இவ்வாறான நடத்தைகளில் கவனம் செலுத்துவது மிகவும் குறைவாகும்.

வகுப்பறையிலுள்ள ஒளியின் அளவு, காற்றோட்ட வசதி, இட வசதி போன்ற அம்சங்கள் மாணவர்களின் கற்றல் நடத்தையினை பாதிக்கின்றன. இவ்வாறான பெளதீகக் கட்டமைப்புகள் ஆசிரியரின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டவையே. ஆயினும் ஒரு வாண்மை மிக்க ஆசிரியர் கிடைக்கத்தக்க வளங்களிலிருந்து உச்ச பயனைப் பெறுவதற்கு ஏற்ற ஒழுங்கு முறைகள் செய்வது அவரது பொறுப்பாகும்.


வாண்மைமிக்க ஆசிரியர் ஒருவரின் வகுப்பறையானது, மிகவும் சந்தோஷமானதாகவும், ஆரோக்கியமானதாகவும், மன அமைதி நிறைந்த ஒரு இடமாகவும் காணப்படல் வேண்டும். ஏனெனில் குடும்பச் சூழலை விட்டு பாடசாலைக்கு வரும் மாணவர்களுக்கு அவர்களின் குடும்பத்தில் கிடைக்கின்ற சந்தோசம், அமைதி போன்ற அனைத்துத் தேவைகளும் பூரணமாக முறையில் பூர்த்தி செய்யப்பட வேண்டும். இது போலவே, ஆசிரியர்கள் குடும்பத்தவர்கள் கவனிப்பதை விட சிறப்பான முறையில் மாணவர்களைக் கவனிக்க வேண்டும்.

புரோபி (Brophy 1988) என்பவரின் ஆய்வின்படி “தம்மை அதிகாரமிக்கவர்கள் அல்லது ஒழுக்கத்தைப் பேணும் நடவடிக் கைகளில் வெற்றிகரமாக ஈடுபடுபவர்கள் எனக் கருதும் ஆசிரியர்களை விட வினைதிறன் உள்ள கற்றல் சூழலை சிறப்பாக அமைத்து தொடர்ந்து பேணிவரும் ஆசிரியர்கள் நல்ல முறையில் வகுப்பறையை முகாமை செய்கின்றனர்.” எனவே, வாண்மைமிக்க ஆசிரியர்களாலேயே வகுப்பறைச் செயற்பாடுகளை சிறப்பான முறையில் நடாத்த முடியும்.

வினைத்திறன் கொண்ட ஒரு ஆசிரியர் பாடத்தினை வடிவமைக்கும் போது மிகவும் கவனமாகச் செயற்பட வேண்டும். நாம் உருவாக்கும் பாட வடிவம் மாண வர்களின் கற்றலை மேம்படுத்தக் கூடிய தாகவே அமைதல் வேண்டும். இதற்காகவே மெடலின் ஹன்ரர், பராக் றோன்சைன் (Mededelin Hanter 1982, Barak Rosenshine 1986) போன்றோர் மாணவர்களை மேம்படுத்தக் கூடிய வகையில் மிகவும் வினைத்திறன் உள்ள பாடக் கட்டமைப்பைக் கண்டுபிடிக்க பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர்.

எனவே, மாணவர்களின் கற்றலை வினைத்திறன் உள்ளதாக்கும் வகையில் எமது பாடத்திட்டம் அமைதல் வேண்டும். அதற்காக நாம் சில அம்சங் களையும் கடைப்பிடிக்க வேண்டும். அவை யாக, பாடத்தின் அறிமுகம், உள்ளடக்கப் பட்டிருக்கும் பாடப்பரப்பின் தெளிவான விளக்கம், மாணவர்கள் பெறும் விளக்கம் தெளிவானதா/ போதுமானதா என சரிபார்த்தல், பாடத்தின் சுருக்கம் அல்லது முடிவுரை, மதிப்பீடு மேலும் தேடி விளக்கம் பெறக் கூடிய வழிமுறைகள் போன்றன மூலம் பாடத்தின் ஊடாக அடைய வேண்டும் என எதிர்பார்க்கப்பட்ட விளைவை பாட இறுதியில் அடையத்தக்க வகையில் எமது பாடத்திட்டம் திட்டமிடப் பட்டிருத்தல் வேண்டும்.

பாடத்திட்டத்தின் அடிப்படையில் பாடங்களைக் கற்பிக்கும் போது மாணவர்கள் விரும்பக் கூடிய, ஆர்வத்தை தூண்டக் கூடிய வகையில் ஆசிரியரானவர் கற்பித்தலை மேற்கொள்ள வேண்டும். ஒரு பாடத் தினை கற்பிக்கின்ற வேளையிலே அதற்கான உதாரணங்களை தமது அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தி கற்பித்தால் மாணவர்களுக்கு இலகுவில் புரிந்து கொள்ளக் கூடியதாகவும் படிப்பதில் ஆர்வமும் அதிகரிக்கும்.


ஆசிரியர் ஒருவரின் கற்பித்தல் நுட்பங்களை உணர்ந்து மாணவர்கள் அவரின் வகுப்ப றைக்குள் மிகவும் ஆர்வத்துடன் சமுக மளித்தல் அவரின் கற்பித்தலுக்குக் கிடைக் கும் பாரிய வெற்றியாகும். எவ்வாறெனில் சில ஆசிரியர்கள் என்றாலே மாணவர்களுக்குப் பிடிக்காது.

ஆனால் சில ஆசிரியர்கள் என்றால் கொள்ளைப் பிரியம். இந்த ஆற்றலானது ஒவ்வொரு ஆசிரியர் களினதும் கற்பித்தல் திறமையில் தங்கியுள்ளது. கற்பித்தல் ஆர்வத்தைத் தூண்டும் சிறந்த கருவியாக நகைச்சுவை உணர்வுடன் கற்பிப்பது விளங்குகிறது. ஒரு ஆசிரியரா னவர். கோபமான முகத்துடனும் கடின மான குரலுடனும் பாடமொன்றினைக் கற்பிக்கும் போது மாணவர்களிடம் அது வரவேற்பளிக்காது.

அது தவிர ஒரு ஆசிரியர் கலகலப்பான முகத்துடனும், புன்னகையுடனும் நகைச்சுவை உணர்வு கொண்ட பாணியுடன் கற்பிக்கின்ற வேளையில் அந்த ஆசிரியரின் பாடத்திற்கு வரவேற்பு அதிகமாகக் காணப்படும். எந்தவொரு விடயத்தினையும் கற்பிக்கின்ற போது வாண்மை உணர்வுடன் அதனை விளக்க முற்படுகின்ற வேளை அவ்விடயம் மாணவர்களை இலகுவில் சென்றடையும்.

அத்துடன் வகுப்பறையும் எந்த நேரமும் சிரித்த முகத்துடனேயே காணப்படும். நகைச்சுவை என்றாலே அனைவருக்கும் விருப்பமானது. அதனையே வாண்மைமிக்க ஆசிரியரானவர் தமது கற்பித்தல் ஊடகமாகப் பயன்படுத்துகின்ற வேளை நாம் கற்பிக்கும் விடயம் மாணவர்களிடம் இலகுவில் சென்றடையும்.

ஒரு ஆசிரியருக்கு இருக்க வேண்டிய கற்பித்தல் சாதனங்களில் முதன்மை இடம் வகிப்பது மொழியாகும். வகுப்பறை யில் ஆசிரியரின் மொழிப்பிரயோகமானது முக்கியமானதாகும். வகுப்பறையானது பல வித்தியாசமான மொழிப் பிரயோகத்தை பயன்படுத்தும் மாணவர்களக் கொண்டு காணப்படும்.

அதாவது பிற ஊரைச் சேர்ந்த மாணவர்களும் கற்கலாம். அந்த அடிப்படை யில் மாணவர்களின் மொழிப் பயன்பாட்டினை அறிந்து ஆசிரியரானவர். அதற்கு ஏற்ப செயற்பட வேண்டும். எல்லோருக்கும் ஒரே மாதிரியான மொழியை நாம் பயன் படுத்துகின்ற வேளையில் அது அவர்களால் விளங்கிக் கொள்வதில் சிரமம் ஏற்படும்.

வகுப்பறையானது பலதரப்பட்ட மாணவர்களைக் கொண்டது. இவர்களுக்கிடையேயான இடைத் தொடர்பானது தனியாள் மற்றும் குழு ரீதியாக ஏற்படு கின்றது. இவ்வாறு மாணவர்கள் தங்களுக் கிடையே கருத்துக்களை பரிமாற வேண் டிய சந்தர்ப்பங்கள்பல காணப்படுகின்றன.

ஆசிரியரானவர் ஒரு விடயத்தினைக் கற்பிக்கின்ற வேளையில் அது பற்றிய விளக்கத்தினை ஒவ்வொரு மாணவரிடமும் தனிதனியே கேட்காது முதலில் மாணவர்க ளைக் குழு ரீதியாகவோ அல்லது வகுப்பு வாரியாகவோ கலந்துரையாட விட வேண்டும்.

ஏனெனில் பல மாணவர்கள் கலந்துரையாடுகின்ற வேளையில் ஒவ்வொரு மாணவரிடமிருந்தும் ஒவ்வொரு தகவல் வரும் போது நாம் எதிர்பார்ப்பதை விட அதிகளவான தகவல்கள் நமது கற்பித்தலுக்குக் கிடைக்கின்றன.

வகுப்பறையில் கலந்துரையாடலானது மிகவும் முக்கியமானது. இது தொடர்பான கொள் கையொன்று 1953ம் ஆண்டு மொரீனோ (Morino) என்பவரால் ஏற்படுத்தப்பட்டது. இதனை ‘சமூகமானம்’ என அழைத்தார். இது அவர் எழுதிய (“Who shoil Survive”) என்ற நூலில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் வகுப்பறையில் ஒவ்வொரு மாணவரும் கொண்டுள்ள உறவு மற்றும் வகிபாகம் தெளிவாக விளக்குகின்றது.

எனவே, வினைத்திறன் மிக்க ஆசிரியரானவர் வகுப்பறையில் மாணவர்களை கலந்துரையாடலில் ஈடுபடுத்தி அவர்களுக்கு இடையேயான உறவுகளை வளர்க்க வழிபடுத்த வேண்டும்.

வகுப்பறைக் கற்பித்தல் நடவடிக்கையின் மிக உன்னதமான பயனைப் பெற வேண்டுமெனின் பொருத்தமான கற்பித்தல் உபகரணங்களைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு அவற்றைக் கண் முன்னே நிறுத்தும் போது அவர்களால் இலகுவில் கற்றலை ஏற்றுக் கொள்ள முடியும்.

உதாரணமாக மாணவர்களுக்கு தாவர இலைகளின் இயல்பு பற்றிக் கற்பிக்கும் போது பாடப் புத்தகத்தில் உள்ள படங்களைக் காண்பிக்காது சூழலில் காணப்படும் உண்மைப் பொருட்களைக் கொண்டு கற்பிக்கும் போது அவர்கள் அவற்றின் உண்மைத் தன்மை யினை இலகுவில் இனங்கண்டு கொள்வர்.

இது போலவே புவியியல், கணிதம், விஞ்ஞானம், ஆரம்பப்பிரிவு போன்ற பாடங்களைக் கற்பிக்கின்ற வேளையில் பொருத்தமான உபகரணங்களைப் பயன்படுத்தி கற்பித்தல் வேண்டும். இதன் போது மாணவர்களுக்கு எம்மால் உரிய விளக்கங்களை இலகுவில் வழங்க முடியும். உபகரணங்களைப் பயன்படுத்துவதால் அவ் விளக்கங்களையும் தெளிவாக ஏற்றுக் கொள்ள முடியும்.


ஒரு பாடசாலையின் உயிரோட்டமான சூழலுக்கு அடிப்படைக் காரணிகளில் ஆசிரியர் மாணவர்கள் இடையேயான உறவு முறை சிறப்பாகப் பேணப்படுவது விளங்குகின்றது. குடும்ப சூழலை விட்டு பாடசாலைக்குள் கால் வைக்கும் மாணவர்களுக்கு உரியவாறான பாதுகாப்பும் பாசமும் அளிப்பது ஆசிரியர்கள் ஒவ்வொருவரினதும் கட்டாயக் கடமையாகும்.

வகுப்பறைச் சூழலை எடுத்துக் கொண்டால் பல வித குடும்ப சூழ்நிலைகளிலிருந்து மாணவர்கள் வந்திருப்பர். இதனால் வினைதிறன் கொண்ட ஆசிரியரானவர் மாணவர்களைப் பற்றியும் அவர்களின் குடும்ப சூழ்நிலைகள் பற்றியும் அறிந்து அவர்களுக்கு உரியவாறான சூழலை அமைத்துக் கொடுக்க வேண்டும்.

எப்போதும் ஆசிரியர்- மாணவர் உறவு முறையானது சுமுகமாக காணப்பட வேண்டும். அப்போதுதான் மாணவர்கள் தமது கற்றல் நடவடிக்கையில் ஆர்வத்தினை ஏற்படுத்துவர். பொதுவாகவே பாடத் திட்டங்களுக்கு குறிப்பிட்ட நேரம் வரையறுக்கப்பட்டுள்ளது. இதில் எவரும் கூட்டிக் குறைத்து மாற்றம் செய்ய முடியாது. ஆனால் அந்நேரத்திற்கு துரோகம் செய்யலாம்.

எவ்வாறெனில், வகுப்பறைக்குப் பிந்தி வரல், முந்திவெளி யேறல், வகுப்பறைக்கு வந்து நேரத்தை வீணடித்தல், பாடசாலைக்கு வந்தும் வகுப்பறைக்கு வராமல் இருத்தல் போன்ற நடைமுறைகள் மூலம் நேரத்தினை வீணடிக்கலாம்.

ஆனால், மாணவர்களின் கற்றல் அடைவைத் தீர்மானிக்கும் ஒரு காரணி அவர்கள் கற்கும் நேரமாகும். எனவே, திறமை மிக்க ஆசிரியரானவர் இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் நேரத்தினை வீண் விரயம் செய்யாமல் அர்ப்பணிப்புடனும், செயற்திறனுடனும் தமக்கென ஒதுக்கப்பட்ட நேரத்தினை உச்ச அளவில் பயனுள்ள வகையில் பயன்படுத்தி மாணவர்களின் கற்றலுக்கு உதவி புரிதல் வேண்டும். கற்கும் நேரம் அதிகரிக்கும் போது அடைவு மட்டமும் அதிகரிக்கின்றது.