ஆசிரியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்க வேண்டாமென்ற அறிக்கையை GMOA வாபஸ் பெறவேண்டும்..!

தேசிய சம்பளக்கோரிக்கைக்கு முரணான வகையில் ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்க கூடாது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கையை உடனடியாக அச்சங்கம் வாபஸ் பெறுவதுடன் தமக்கு கற்பித்த ஆசிரியர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டுமென இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகள் சங்கம் கோரியுள்ளது.


கடந்த 24 வருடங்களாக கல்வியமைச்சு ஆசிரியர்களுக்கு இழைத்து வரும் சம்பள அநீதிக்கு எதிரான போராட்டங்களை ஆசிரியர் தொழிற் சங்கங்கள் சாத்வீகமாக முன்னெடுத்து வருகிறது. இந்த நீதியான போராட்டத்திற்கு நாட்டில் உள்ள தொழில் சங்கங்கள் தமது ஆதரவை தெரிவித்து ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என அரசைக் கேட்ட வண்ணமுள்ளன.

ஆனால் அரச வைத்தியர்கள் சங்கமானது ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றக் கூடாது என அரசைக் கோரியுள்ளமை மிகவும் மோசமான நன்றி கெட்ட தனமான வேண்டுகோளாகும்.


தமக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கு காலம் காலமாக நன்றியுணர்வுடன் இருக்க வேண்டிய வைத்தியர் சமூகம் ஏறிவந்த ஏணியை உதைத்து தள்ளிவிட்டு நன்றி கெட்டதனமாக நடந்து கொண்டு ஆசிரியர்களது கோரிக்கையை நையாண்டி பண்ணும் விதத்தில் நடந்து கொள்வது குருவை நிந்தித்த குற்றத்திற்கு ஆளாவதுடன் அவர்களது சாபத்தை பெற வேண்டிய நிலையும் ஏற்படும்.


சுகாதாரத் துறையில் வைத்தியர்கள் சம்பள அதிகரிப்பு கோரி அப்பாவி நோயாளிகள், பொது மக்களை பணயம் வைத்து கடந்த காலங்களில் நடாத்திய போராட்டத்திற்கு எதிராக ஆசிரியர் சங்கங்கள் ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்கவோ, சம்பள அதிகரிப்பு வழங்க கூடாது என்றோ ஓர்அறிக்கை கூட வெளியிடாத நிலையில், அரச வைத்தியர் சங்கம் இவ்வாறு நடந்து கொள்ள முற்படுவது தொழிற் சங்க ஒற்றுமையை சீர்குலைக்கும் செயற்பாடாகுமெனவும், இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகள் சங்க செயலாளர் முகம்மத் முக்தார் மேலும் தெரிவித்துள்ளார்.