நாளை பிரதமருடனான பேச்சுவார்த்தையில் தீர்வு இன்றேல் எமது போராட்டம் தொடரும்..!

ஆசிரியர் – அதிபர் தொழிற் சங்கத்தினருக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை நாளை பகல் அலரி மாளிகையில் இடம் பெறவுள்ளது.

ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காது விடின் போராட்டம் தொடரும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது. 21ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு கிடைத்தால், ஆசிரியர்களும், அதிபர்களும் பாடசாலைகளுக்கு சமுகமளிப்பார்கள். என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,

நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர் -அதிபர்கள் போராட்டத்தில் ஈடுப்படுகிறார்கள். 24 வருடகால பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத் தரகோரி சுமார் 92 நாட்களாக போராட்டத்தில் ஈடுபடுகிறோம்.

எம்மால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தீர்வை காண்பதை விடுத்து போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள ஆசிரியர் அதிபர்களை தண்டிக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் பல்வேறு வழி முறைகளின் ஊடாக முன்னெடுத்துள்ளது.


அதிபர்-ஆசிரியர் போராட்டத்தை முடக்கும் வகையில் திட்டமிட்ட வகையில் சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. நியாயமான தீர்வையே கோருகிறோம்.

அதிபர்-ஆசிரியர் தொழிற் சங்கத்தினருக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் நாளை பேச்சுவார்த்தை இடம் பெறவுள்ளது. இப்பேச்சுவார்த்தையின் ஊடாக தீர்வு கிடைக்கப் பெற்றால் 21 ஆம் திகதி ஆசிரியர்-அதிபர்கள் பாடசாலைக்கு சமூகமளிப்பார்கள்.


இம்முறையும் தீர்வு கிடைக்காது விடின் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்படுவோம். பிரதமர் தலைமையில் கடந்த ஜூலை மாதம் இடம் பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனை தொடர்ந்து நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் அறிக்கையும் முரண்பாடான தன்மையில் காணப்படுகிறது என்றார்.


இதேவேளை தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்-அதிபர் தொழிற் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று அலரி மாளிகையில் இடம் பெற்றது. இச் சந்திப்பில் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன, அபயராம விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.