ஒரு படி கீழிறங்கி வந்துள்ளோம், இனியும் முடியாது; அதிபர் – ஆசிரியா் தொழிற் சங்கம் மீண்டும் எச்சரிக்கை..!

எதிர்வரும் நாட்களில் அதிபர் , ஆசிரியர்களின் தொழிற் சங்க நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும், 21 ஆம் திகதிக்கு முன்னர் ஒரு முடிவை அறிவிக்காது விட்டால் பாடசாலைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பில் எங்களின் மாற்று தீர்மானத்தை அறிவிக்க நேரிடும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளா் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.


கொழும்பில் இன்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டாா்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு படி கீழிறங்கி வந்துள்ளோம். சுபோதினி அறிக்கையை அமுல்படுத்த வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாக உள்ளது. அந்த அறிக்கையை அமுல்படுத்த வேண்டுமாயின் 71 பில்லியன் ரூபா நிதி தேவைப்படும். ஆனால், 30 பில்லியன் ரூபா நிதி வழங்க வேண்டும் என அமைச்சரவை உப குழுவின் பரிந்துரையை நடைமுறைப் படுத்துமாறு கோருகிறோம்.


அதேபோன்று, அந்த தொகையை சுபோதினி அறிக்கையின் ஒரு பகுதியாக வழங்க வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. இது தொடர்பில் பலதடவைகள் தெளிவு படுத்தியுள்ளோம் என்றும் அவர் சுட்டிக் காட்டினாா்.