எமது நியாயபூர்வமான போராட்டத்திற்கான தீர்வைப் பெறாமல் அதனைக் கைவிடத் தயாரில்லை – அதிபர் சங்கம்

அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு 21 ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு வழங்கப்படாது விட்டால் பாடசாலைகளுக்கு சமூகமளிக்கப் போவதில்லை என்று அறிவித்துள்ள இலங்கை அதிபர்கள் சங்கம், எமது நியாயபூர்வமான போராட்டத்திற்கான தீர்வைப் பெறாமல் அதனைக் கைவிட நாம் தயாராக இல்லை என்று குறிப்பிட்டுள்ளது.


இது தொடர்பில் இலங்கை அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சீ.என்.லியனகே தெரிவிக்கையில்,

அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு சாதகமானதொரு தீர்வு வழங்கப்படும் வரை அதிபர்கள் எவரும் பாடசாலைக்கு சமூகமளிக்கப் போவதில்லை. பிரதேச அரசியல்வாதிகளால் எமது போராட்டத்தை வெவ்வேறு வழிகளில் சீர்குலைக்க முயற்சிக்கப்படுகிறது.


அந்த முயற்சிகளை தோற்கடிக்கும் வகையில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல்களில் நாம் கலந்து கொள்ளவில்லை. எந்த சந்தர்ப்பத்திலும் போராட்டத்திற்கான நியாய பூர்வமான வெற்றியைப் பெறாமல் அதனைக் கைவிட நாம் தயாராக இல்லை என்றார்.