அதிபர்-ஆசிரியர்களுக்கு அரசின் அதிரடி உத்தரவு; தொழிற் சங்கப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்ய முடியுமா?

இலங்கையில் எதிர்வரும் 21 ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படவுள்ள நிலையில் ஆசிரியர்களை பணிக்கு சமூகமளிக்க வேண்டாம் என எவராவது பணித்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், யாரேனும் அழுத்தம் கொடுத்தால் அதிபர், ஆசிரியர்கள் தயக்கமின்றி வெளிப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர எச்சரிக்கை வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போது இந்த எச்சரிக்கையை விடுத்த சரத் வீரசேகர, ஆசிரியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தால் அப்பாவி மாணவர்களே பாதிக்கப்படுவதாக கூறியுள்ளார்.


இதன் போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

21 ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. 200 மாணவர்களுக்கும் குறைவானவர்களைக் கொண்ட பாடசாலைகளே இவ்வாறு திறக்கப்படவுள்ளன.

ஆசிரியர்கள் மீது நான் அதீத கௌரவத்தை வைத்திருக்கின்றேன். அவர்களது சம்பள உயர்வு கோரிக்கை நிச்சயமாக ஏற்கின்றோம். யுத்தத்தை, ஆயுததாரிகளின் போராட்டத்தை நாம் நியாயப்படுத்த மாட்டோம். ஏனென்றால் போராட்டத்தில் பொது மக்களும் உயிரழப்பார்கள்.


அதே போல்தான் ஆசிரியர்களின் போராட்டம் காரணமாக அப்பாவி மாணவர்களே பாதிக்கப்படுகின்றனர். எனவே 21ஆம் திகதி ஆசிரியர்கள் பாடசாலைகளுக்குத் திரும்ப வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

பாடசாலைக்குத் திரும்ப வேண்டாம் என ஆசிரியர்களுக்கு தொழிற் சங்க பிரதிநிதிகளோ வேறு தரப்பினரோ அழுத்தம் கொடுத்தால் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும் என்றார்.


இதேவேளை அதிபர் ஆசிரியர்கள் உத்தியோகபூர்வமாக எழுத்து மூல கடிதம் வழங்கியே போராட்டத்தில் நாடளாவிய ரீதியாக ஈடுபட்டு வருகின்றனர். தொழிற் சங்கப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்யவோ, அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கவோ முடியாது. தாபன விதிக் கோவை மற்றும் அரசியல் சாசனத்திற்கு உட்பட்ட வகையிலேயே போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதனாலேயே அதிபர்- ஆசிரியர்களை கைது செய்ய முடியாது, அரச சேவையில் இருந்து நீக்க முடியாது என்பதாலேயே அரசின் கோபம் சங்கங்களை நோக்கி திரும்பியுள்ளதால் அரசியல்வாதிகள் மற்றும் கல்வித் திணைக்கள உயர் அதிகாரிகளைப் பயன்படுத்தி குழப்பங்களை ஏற்படுத்தவும் முயல்கின்றனர்.


அதிபர்-ஆசிரியர்களின் போராட்டம் வெற்றியின் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில் உண்மையில் பாடசாலைக்கு செல்வதா அல்லது இல்லையா என்பதை ஒவ்வொரு அதிபர்-ஆசிரியர்களே மனச்சாட்சியுடன் முடிவெடுக்க வேண்டும்.

அத்துடன் தற்போது அதிபர் சங்கங்கள், ஆசிரிய சங்கங்கள், ஆசிரிய ஆலோசகர்கள் என அனைவரும் நாடளாவிய ரீதியான தொழிற் சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.