எதிர்வரும் 21ம் திகதி பாடசாலைகளைத் திறக்க முடியாது – வட மாகாண அதிபர்கள் சங்கம்

எதிர்வரும் 21ம் திகதி 200ற்கு குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு அனுமதி வழங்கியமைக்கு தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளதாக வடமாகாண அதிபர் சங்கம் அறிவித்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை zoom செயலி ஊடாக நடைபெற்ற கலந்துரையாடலிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக வடமாகாண அதிபர் சங்கம் தெரிவிக்கையில்,

அதிபர், ஆசிரியர்கள் சம்பள முரண்பாட்டை நீக்கக்கோரி கடந்த 90 நாட்களுக்கு மேலாக தொழிற் சங்க போராட்டம் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் அதிபர் ஆசிரியர்களின் முரண்பாடுகளை தீர்க்காது எதிர்வரும் 21ம் திகதி பாடசாலைகளை ஆரம்பிக்க கல்வி அமைச்சு எடுத்த முடிவிற்கு எமது எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றோம்.


நாட்டில் ஆசிரியர்களது நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி நடாத்தப்பட்ட போராட்டங்களுக்கு எமது வடமாகாண அதிபர் சங்கம் தமது ஆதரவை வழங்கியது யாவரும் அறிந்ததே.

இதே போல் தற்போது சம்பள முரண்பாட்டை நீக்கக் கோரி நடாத்தப்பட்டு வரும் போராட்டத்தில் நாமும் பங்கெடுப்பதுடன் எதிர்வரும் 21ம் திகதி நாடளாவிய ரீதியில் 200ற்கு குறைந்த மாணவர்களைக் கொண்ட ஆரம்ப பிரிவு பாடசாலைகளை திறப்பதற்கு தமது எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கின்றோம்.


சம்பள முரண்பாட்டை நீக்கிய பின்னர் பாடசாலைகளை மீளத் திறக்கும் நடவடிக்கைக்கு நாம் உடன்படுகின்றோம் எனவும் வடமாகாண அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது.