சம்பள இடைநிறுத்தம், ஒழுக்காற்று நடவடிக்கையை முடிந்தால் செயற்படுத்துங்கள் – அரசாங்கத்திற்கு சவால்

பாடசாலைக்கு சமூகமளிக்காத ஆசிரியர்-அதிபர்களின் நவம்பர் மாத சம்பளம் நிறுத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளமையை வன்மையாக கண்டிக்கின்றோம்.

ஆசிரியர்-அதிபர்களின் சம்பளம் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் மாகாண ஆளுநர்களுக்கு கிடையாது, ஆகவே வடமேல் மாகாண ஆசிரியர்-அதிபர்கள் நவம்பர் மாத சம்பளம் குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.


அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசியல் அழுத்தம் காரணமாக போராட்டத்தை கைவிடவில்லை. 200இற்கும் குறைவான மாணவர்கள் உள்ள ஆரம்ப பிரிவு பாடசாலைகள் நாளை முதற்பட்டமாக திறக்கப்படுகின்றன.

ஆரம்ப பிரிவு பாடசாலைகளில் பெரும்பாலும் பயிலுனர் ஆசிரியர்கள். சேவையில் ஈடுப்படுகிறார்கள். அத்துடன் 3,800 பாடசாலைகள் தான் 200 இற்கும் குறைவான மாணவர்களை கொண்டதாக உள்ளன.


அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமைய ஆசிரியர்கள் நிகழ்நிலை முறைமை ஊடாக மாணவர்களுக்கு கற்பித்தல் நடவடிக்கைகளில ஈடுபடவில்லை.

மாணவர்களின் நலனை கருத்திற் கொண்டு ஆசிரியர்கள் தன்னிச்சையான முறைமையில் நிகழ்நிலை கற்பித்தலில் ஈடுபட்டார்கள்.

நிகழ்நிலை கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு அரசாங்கம் எவ்வித சலுகைகளையும் வழங்கவில்லை. ஆகவே நிகழ்நிலை முறைமை ஊடாக கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுப்படுமாறு ஆசிரியர்களுக்கு எவரும் அழுத்தம் பிரயோகிக்க முடியாது.


21 ஆம் திகதியும் 22 ஆம் திகதியும் பாடசாலைக்கு வருகை தராத வடமேல் மாகாண ஆசிரியர்-அதிபர்களின் நவம்பர் மாத சம்பளத்தை இடை நிறுத்துவதாக ஆளுநர் ராஜா கொள்ளுரே குறிப்பிட்டுள்ள கருத்து வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அரசியல் நோக்கத்திற்காக இலங்கை கம்யூனிச கட்சியின் கொள்கைகளை மாற்றிக் கொள்வது கட்சிக்கு அக்கட்சிக்கு இழைக்கும் துரோகமாக கருத வேண்டும்.


ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் மாகாண ஆளுநருக்கு கிடையாது. ஆகவே சம்பளம் இடைநிறுத்தம், ஒழுக்காற்று நடவடிக்கை முன்னெடுப்பதை முடிந்தால் செயற்படுத்துமாறு சவால் விடுகிறோம்.

ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்கத்தினர் போராட்டத்தை கைவிடவில்லை. எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலைக்கு சமுகமளித்து போராட்டத்தில் ஈடுப்படுவோம்.என்றார்.