மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது – கல்வி அமைச்சு

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிக்கப்பட்டதன் மூலம் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கோ ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு வருவதற்கோ எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்தார்.

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதால், பாடசாலைகளை ஆரம்பிப்பதில் பாதிப்பு ஏற்படுமா என வினவியதற்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.


இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

கொவிட் தொற்று நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கின்றதால், பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பாக கடந்த மாதத்தில் இருந்து நீண்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்று வந்தன.

அதன் பிரகாரம் சுகாதார வழிகாட்டல்களுடன் முதற் கட்டமாக 200 மாணவர்களுக்கு குறைவான பாடசாலைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டது.


அதனடிப்படையில் நாளை 21ஆம் திகதி 200 மாணவர்களுக்கு குறைந்த பாடசாலைகளில் ஆரம்ப பிரிவு வகுப்புகளை ஆரம்பிக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொண்டிருக்கின்றோம்.

அத்துடன் மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடும் 21 ஆம் திகதி வரையே இருந்தது. என்றாலும் தற்போது அந்த கட்டுப்பாடு 31ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டிருக்கின்றது.

என்றாலும் 200 மாணவர்களுக்கு குறைவான அதிக பாடசாலைகள் கிராம பிரதேசங்களிலேயே இருக்கின்றன. அதனால் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிக்கப்பட்டிருப்பது, பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கோ அல்லது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு வருவதற்கோ பாதிப்பு ஏற்படாது.


மாகாணங்களை கடந்து வரும் ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கின்றது. அவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை பெற்றுக் கொள்ளலாம்.

அத்துடன் நாளைய தினம் 200 மாணவர்களுக்கு குறைந்த பாடசாலைகளின் ஆரம்ப பிரிவு வகுப்புகள் மாத்திரமே ஆரம்பிக்கப்படுகின்றன. அதனைத் தொடந்து கல்வி பொதுத் தராதர உயர்தர மற்றும் தரம் 5 புளமைப்பரிசில் வகுப்புகளை விரைவாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என்றார்.