அதிபா்–ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுக்கு தீர்வை வலியுறுத்தி வவுனியா வடக்கில் கவனயீர்ப்புப் போராட்டம்..!

அதிபா் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல விடயங்களை முன்வைத்து வவுனியா வடக்கின் பல்வேறு இடங்களில் கவனயீர்ப்புப் போராட்டங்கள் இன்று இடம் பெற்றுள்ளது.

அந்த வகையில் வவுனியா வடக்கில்,

கல்மடு மகா வித்தியாலயம்
பூம்புகார் கண்ணகி வித்தியாலயம்
கோவில்புளியங்குளம் முத்தமிழ் வித்தியாலயம்
தரணிக்குளம் கணேஷ் வித்தியாலயம்
தரணிக்குளம் ஆரம்பப் பாடசாலை
புதுக்குளம் ஆரம்பப் பாடசாலை
சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலயம்
மரக்காரம்பளை அ.த.க பாடசாலை
கருங்காலிக் குளம் அ.த.க பாடசாலை
மாதர் பணிக்கர் மகிழங்குளம் க.உ வித்தியாலயம்
பன்றிக் கெய்தகுளம் அ.த.க பாடசாலை
ஒலுமடு மகா வித்தியாலயம்
சேமமடு சண்முகானந்தா வித்தியாலயம்
மறவன்குளம் பாரதிதாசன் வித்தியாலயம் என்பவற்றிற்கு அருகில் குறித்த பிரதேச பாடசாலைகளின் பெற்றோர், பழைய மாணவர்கள் மற்றும் பிரதேச பொது அமைப்புக்களின் ஒழுங்கமைப்பில் குறித்த போராட்டங்கள் இடம் பெற்றன.


குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நீக்கு நீக்கு அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்கு , வேண்டும் வேண்டும் கல்விக்கு 6 வீதம் வேண்டும், உறுதிப்படுத்து, உறுதிப்படுத்து பிள்ளைகளின் கல்வி உரிமையை உறுதிப்படுத்து.

வழங்கு வழங்கு அதிபர் ஆசிரியரின் சம்பள முரன்பாட்டுக்கு தீர்வு வழங்கு, வழங்கு வழங்கு 24 வருடங்களாக கொள்ளையடித்த ஆசிரியர்களின் பணத்தை வழங்கு, அமுல்ப்படுத்து அமுல்ப்படுத்து சுபோதினி கமிசன் அறிக்கையை அமுல்ப் படுத்து, நீக்கு நீக்கு இலவச கல்வியில் இடர்களை நீக்கு.


உள்ளிட்ட பல்வேறு கோசங்களை எழுப்பியவாறும் 24 வருட அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாட்டை நீக்கு, கொத்தலாவல சட்ட மூலத்தை கிளிதெறி, பாடசாலையை நடாத்த பெற்றோர்களிடம் பணம் வசூலிக்காதே போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதேவேளை குறித்த போராட்டங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஆசிரியர் சேவை சங்கத்தின் வவுனியா இணைப்பாளர் திரு.ம.ஜெகதீஸ்வரன்,


அதிபர்-ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு மற்றும் மாணவர்களின் கல்வி உரிமையை வலியுறுத்தி பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்களால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் வெற்றியடைந்துள்ளது.

ஒரு சிறு குழந்தையே தனது பசியை போக்க அழுகை என்ற புரட்சி செய்கின்றது. எனவே எமது உரிமைகளை பெறுவதற்கு போராடுவதை தவிர எமக்கு வேறு வழி இல்லை. அதுபோல எமது 24வருட போராட்டம் இன்றே சகல தரப்பினரையும் இணைத்து ஓரணியில் ஒன்றுபடுத்தியுள்ளது.


நாம் எமது போராட்டத்தை நாம் நிறுத்த வேண்டும் என்றால் எமது சம்பள முரண்பாட்டை அரசு உடன் தீர்க்க வேண்டும். தவறின் எமது போராட்டம் தொடரும். எமது பணத்தை அரசு கொள்ளையடிப்பதை நிறுத்தி அதிபர்-ஆசிரியர்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்.

அத்துடன் இன்றைய தினம் போராட்டங்களில் மழையையும் பொருட்படுத்தாது பங்கு பற்றிய பெற்றோர், பழைய மாணவர்கள், பொது அமைப்பின் உறுப்பினர்கள், அதிபர், ஆசிரியர்கள், ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம் எனத் தெரிவித்தார்.