காய்ச்சல், சுவாசப் பிரச்சினை உள்ள கல்வி சார்/ கல்வி சாரா ஊழியர்களை கடமைக்கு அழைக்க வேண்டாம்..!

காய்ச்சல் மற்றும் சுவாசம் சார்ந்த பிரச்சினையுள்ள கல்வி சார்/ கல்வி சாரா ஊழியர்களை கடமைக்கு அழைப்பதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு கல்வி அமைச்சின் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

கல்வி அமைச்சின் செயலாளர் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


கோவிட் பரவுவதைத் தடுப்பதற்காக சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி பாடசாலையை நடத்துவது அனைத்து அதிபர்களின் பொறுப்பாகும் என்று குறிப்பிட்ட கல்வி அமைச்சின் செயலாளர்,


காய்ச்சல் மற்றும் சுவாசம் தொடர்பான நோய்கள் ஏற்பட்டிருப்பின் அல்லது குடும்ப அங்கத்தினர் யாராவது கோவிட் நோயால் பாதிக்கப்பட்டிருப்பின் அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவர் கோவிட் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு முடிவு வரும் வரை காத்திருப்பின் அல்லது தனிமைப் படுத்தப்பட்டுள்ள குடும்ப உறுப்பினர்களின் தனிமைப்படுத்தல் காலம் முடிவடையவில்லை ஆயின் குறித்த சந்தர்ப்பங்களில் ஆசிரியர்களையோ அல்லது அதிகாரிகளையோ பாடசாலைக்கு அழைக்க வேண்டாம் என அனைத்து அதிபர்களையும் அறிவுறுத்துமாறு கல்வி அமைச்சின் செயலாளர் கோரியுள்ளார்.