பாடசாலைகளின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளுக்காக 10-13 வகுப்புக்கள் நாளை ஆரம்பம்..!

இலங்கையில் கொரோனா தொற்றின் காரணமாக மூடப்பட்டுள்ள சகல பாடசாலைகளையும் மீள ஆரம்பிக்கும் வேலைத் திட்டத்திற்கு அமைய, அதன் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளன.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைவடைந்த நிலையில் கடந்த மாதம் முதல் கட்டமாக 200 குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


இரண்டாம் கட்டமாக தரம் 10,11,12 மற்றும் 13 ஆகிய வகுப்புக்களின் கல்வி நடவடிக்கை நாளை ஆரம்பிக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

சுகாதார வழிகாட்டி ஆலோசனைகளுக்கு அமைவாக மாணவர்களை, பாடசாலைகளுக்கு அனுப்புவது பெற்றோரின் பொறுப்பாகும் என்றும் மாணவர்களும் இது தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.


இதேவேளை, ஆரம்பப் பிரிவுகளைக் கொண்ட பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப் படுவதாகவும் சுகாதார அமைச்சின் அனுமதி கிடைத்தவுடன் தரம் 6 இலிருந்து 9 வரையான வகுப்புக்ககளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


அத்துடன் 6-9 வரையான வகுப்புகளிற்கு மட்டும் கற்பிக்கும் ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்கத் தேவையில்லை என்பதுடன் 6-9 வரையான வகுப்புகளுடன் ஏனைய வகுப்புக்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.